என் தம்பியின் உடல்நலனே முக்கியம்... நடிகர் ரஜினியின் சகோதரர் சொல்ல வரும் சங்கதி..!

By Asianet TamilFirst Published Oct 29, 2020, 8:31 PM IST
Highlights

தற்போது கொரோனா காலம் என்பதால் என்னுடைய தம்பியின் உடல்நலனே மிகவும் முக்கியம் என்று நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார்.
 

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ரஜினி எப்போது அரசியல் கட்சித் தொடங்குவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அறிக்கை என்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேற்று இரவு முதல் ஒரு கடிதம் பரவியது. அந்தக் கடிதத்தில் ரஜினியின் உடல்நலம் குறித்தும் கொரோனா காலத்தில் மக்களைச் சந்தித்து அரசியல் பணிகளில் ஈடுபடுவது குறித்து மருத்துவர்கள் தெரிவித்த அறுவுரைகள் குறித்து இடம் பெற்றிருந்தது.


இந்த அறிக்கை ரஜினி ரசிகர்களை குழப்பிய வேளையில், இது குறித்து ரஜினி ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைப் பதிவிட்டார். அதில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று ரஜினி தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்தத் தகவலால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணாவும் சில தகவல்களை தனியார் தொலைக்காட்சியில் வெளிப்படுத்தினார். அதில், “கொரோனாவுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். கொரோனா வந்த காரணத்தால் கட்சி பெயர், கொடி அறிவிப்பது கொஞ்சம் தள்ளிப்போனது. இல்லையென்றால் கண்டிப்பாக ரஜினி அறிவித்திருப்பார். தற்போது கொரோனா காலம் என்பதால் என்னுடைய தம்பியின் உடல்நலனே மிகவும் முக்கியம். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. ஆனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி  அவர் இருப்பது அவசியம். என்றபோதும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு ஜனவரியில் தெரியவரும்” என சத்ய நாராயணா தெரிவித்தார்.
 

click me!