
ஆந்திர மாநிலத்துக்கு துரோகம் இழைத்த பிரதமர் மோடி அவர்களே நீங்கள் இங்கு வந்தால் எங்கள் மக்கள் உங்களை ஓட, ஓட விரட்டி அடிப்பார்கள் என்றும் அப்புறம் நீங்க பதுங்கு குழிக்குள்தான் இருக்க வேண்டும் என்றும் மறைந்த ஆந்திர முதலமைச்சர் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க தவறிய மத்திய அரசை கண்டித்து தனது பிறந்தநாளான நேற்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும் மறைந்த ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், ஆந்திர சட்டசபை உறுப்பினருமான பாலகிருஷ்ணா மிகவும் ஆவேசமாக பேசினார். பிரதமர் மோடியை துரோகி என்றும் மோசடிக்காரர் என்றும் அவர் தாக்கிப் பேசினார்.
ஆந்திர மக்களை நேரில் வந்து சந்தியுங்கள். அவர்கள் உங்களை அடித்து ஓட விடுவார்கள். நீங்கள் எங்கேயும் போய் ஒளிந்துக்கொள்ள முடியாது. பதுங்கு குழிக்குள் நீங்கள் மறைந்திருந்தாலும் பாரதமாதா மண்ணைத்தள்ளி உங்களை புதைத்து விடுவாள் என பிரதமரை நேரடியாக குறிப்பிட்டு பாலகிருஷ்ணா கடுமையாகப் பேசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆந்திர மாநில பாஜகவினர் பாலகிருஷ்ணாவுக்கு எதிராக அவதூறு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர்.