ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய உத்தரவு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 31, 2021, 11:17 AM IST
Highlights

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக கேட்டறிந்த முதலமைச்சர், ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். 

நிதித் துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் துறை சார்ந்து மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : இக்கூட்டத்தில் நிதித் துறையின் கீழ் செயல்படும் துறைகளான கருவூலம் மற்றும் கணக்குகள், ஓய்வூதியம், உள்ளாட்சி நிதி தணிக்கை, கூட்டுறவு தணிக்கை, துறை தணிக்கை மற்றும் நிர்வாக தணிக்கை, அரசு தகவல் தொகுப்பு விபரம் மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் செயல்பாடுகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். 

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடைகள் அவை செலவிடப்பட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளம் வாயிலாக நன்கொடைகள் பெறும் வசதியில், தற்போதைய நிலை குறித்தும். 8-5-2021 முதல் 28-7-2021 வரை ரூபாய் 500 கோடிக்கும் அதிகமான நன்கொடை பெறப்பட்டு, அதில் ரூபாய் 305 கோடிக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பான பணிகளுக்கு செலவிடப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் செயல்பாடு, நிலை, பயன் பெற்று வரும் பயனாளிகளின் விவரங்கள், சார்நிலை  கருவூலங்களில் செயல்பாடுகள். 

அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அரசின் வரவு செலவு திட்ட நடவடிக்கைகளில் மற்றும் வரவு செலவு திட்டம் தயாரிப்பதில், நவீன வழி முறைகளை கையாளுதல், எளிய மற்றும் பேச்சு வழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு செலவு திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக கேட்டறிந்த முதலமைச்சர், ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!