அத்து மீறிய அதிமுகவினர் 800 பேர் மீது வழக்கு பதிவு.. மதுரை ர.ரக்களுக்கு சேதனை மேல் சோதனை.

By Ezhilarasan BabuFirst Published Jan 5, 2022, 12:58 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசிக்கு எதிராக முன்வைத்து வருகிறது. குறிப்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் குறிவைத்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நோய்த்தடுப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 800 பேர் மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசிக்கு எதிராக முன்வைத்து வருகிறது. குறிப்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் குறிவைத்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு,  திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் செல்வம், மதுரை முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என 800 அதிகமானோர் கலந்துகொண்டனர். அப்போது திமுக அரசை கண்டித்தும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது போதிய அளவுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எம்ஜிஆர் மன்ற மாநகர மாவட்ட செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்ட 800 பேர் மீது மதுரை தெற்குவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் அதிமுகவினர் 800 பேர் மீது போலீசார் வழக்கு செய்திருப்பது அக்கட்சி தொண்ர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் என தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு கடுமையாக்கி வருகிறது. இந்நிலையில் நோய்த்தடுப்பு நெறிமுறைகளை இன்றி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!