3 மாதத்தில் 40 ஆயிரம் கோடிகடன். இந்தாண்டு 92, 484 கோடி கடன் வாங்க உத்தேசம். நிதித்துறை கூடுதல் செயலர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 3:45 PM IST
Highlights

டாஸ்மாக் வருமானத்தை பொறுத்தவரை இந்த ஒரு ஆண்டுக்கு 4-5% சதவிகிதம் குறைவாக உள்ளது. கடைகள் குறைப்பு, பார்கள் திறக்கப்படவில்லை போன்ற காரணங்களால் வருவாய் குறைந்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதித்துறை கூடுதல் செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடுமையான நிதி சூழலில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை இது ஆகும். கொரோனா சூழலால் வருவாய் இழப்பு, கூடுதல் செலவு, புதிதாக பதவியேற்றுள்ள அரசு என பல நெருக்கடியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலத்தில் நிர்வாகம் மற்றும் ஆளுமை எவ்வாறு அமையும் என முன்னோடி அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளது. அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிசெய்வது, அரசின் சொத்துக்களை நிர்வகிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையை அமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 

முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட மக்களின் தேவைக்கு ஏற்ற திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தற்காலிக நிதிநிலை அறிக்கையே என்றும், நிலையை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மூலதனத்தை பெருக்க கூடுதல் நிதி ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதை இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதை செய்ய இயலும், எவ்வாறு செய்ய இயலும் என ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 2 கோடிக்கும் மேலான இரு சக்கர வாகனங்கள் நம் மாநிலத்தில் உள்ளன. இதனால் பெட்ரோல் மீதான வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் டீசல் வாகனங்கள் குறைவு என்பதாலே அதற்குரிய வரிகுறைப்பு அவசியமில்லை என்பதால், தற்போது டீசலுக்கு வரி குறைக்கப்படவில்லை. 

டாஸ்மாக் வருமானத்தை பொறுத்தவரை இந்த ஒரு ஆண்டுக்கு 4-5% சதவிகிதம் குறைவாக உள்ளது. கடைகள் குறைப்பு, பார்கள் திறக்கப்படவில்லை போன்ற காரணங்களால் வருவாய் குறைந்துள்ளது. இந்த ஆண்டு பல நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் நுகர்வு குறைந்துள்ளது. அதற்கு வரி உயர்த்தி வருவாயை சரி செய்திருக்கிறோம். பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த 3 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதிகளுக்காக வாங்கப்படுகிறது என கூறமுடியாது. ஒட்டுமொத்த செலவினங்களுக்காக கடன் வாங்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்காக வாங்கப்படுகிறது என கூறமுடியாது. அவை தவிர்த்து அரசுக்கு செலவினங்கள் உள்ளது. 

இந்த ஆண்டு 92 ஆயிரத்து 484 கோடி கடன் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது தொடர்பாக ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர்கிறது. வறுமைக்கோடு முறையை நாம் தற்போது பின்பற்றுவதில்லை. நியாயமான தகுதியான நபர்களை கண்டுபிடித்து 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா காரணமாக அரசுப்பேருந்துகளில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பெரும்பாலும் பின்தங்கிய மக்களே அதிகளவில் பயணம் செய்பவர்களாக உள்ளனர்.  விபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறைபாடு போன்ற காரணங்களுக்காக எல்லா நாடுகளிலும் பொதுபோக்குவரத்திற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது" ,என்றார்.
 

click me!