2015 சென்னை பெருவெள்ளத்திற்கு காரணமே அமைச்சர் உதயகுமார் தான்! அரசு தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் திடுக் தகவல்!

By vinoth kumarFirst Published Oct 4, 2018, 9:20 AM IST
Highlights

2015ம் ஆண்டு சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான் காரணம் என்று அரசு தரப்பு சாட்சியும் அ.தி.மு.க வழக்கறிஞருமான பரணிதரன் சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.

2015ம் ஆண்டு சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான் காரணம் என்று அரசு தரப்பு சாட்சியும் அ.தி.மு.க வழக்கறிஞருமான பரணிதரன் சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் திறக்கப்பட்டதால் அடையாறும், கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து நகருக்குள் புகுந்தது. 

இதனால் சென்னை மாநகரம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தது. சென்னையை மிகப்பெரிய கனமழை தாக்க உள்ளதாக மத்திய அரசு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே எச்சரித்ததாகவும், ஆனால் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்.

 

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி திடீரென ஜெயலலிதா திறக்க உத்தரவிட்டதால் தான் பெருவெள்ளம் ஏற்பட்டதாகவும் ஸ்டாலின் புகார் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு அவதூறு செய்யும் வகையில் இருப்பதாக கூறி அப்போதையே முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டாலினுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

நேற்றைய விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியாக அ.தி.மு.க வழக்கறிஞர் பரணிதரன் கூண்டில் ஏற்றப்பட்டார். அவர் தனது சாட்சியத்தை பதிவு செய்யும் போது, 2015ம் ஆண்டு சென்னையில் மிக கனமழை கொட்ட உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னரே மத்திய புவியியல் ஆய்வு மையம் தமிழக அரசை எச்சரித்ததாக கூறினார். மத்திய அரசிடம் இருந்து வந்த எச்சரிக்கை அப்போதைய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தெரியும் என்றும் அரசு தரப்பு சாட்சியான பரணிதரன் ஒரு குண்டை தூக்கி போட்டார். 

மேலும் கனமழை குறித்த மத்திய அரசின் எச்சரிக்கையை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்காமல் உதயகுமார் மறைத்துவிட்டதாகவும் பரணிதரன் வாக்குமூலம் அளித்தார். அத்துடன் செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறக்க உத்தரவிட்டது வருவாய்த்துறை அமைச்சரான உதயகுமார் தானே தவிர முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இல்லை என்றும் பரணிதரன் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான ஒரு வழக்கில் அரசு தரப்பு சாட்சியான அ.தி.மு.க வழக்கறிஞர் திடீரென அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக சாட்சியம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!