200 தொகுதிகளில் உதய சூரியன்... 2021 தேர்தலில் திமுகவின் கூட்டணி கணக்கு..!

By Selva KathirFirst Published Jul 25, 2020, 10:06 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை களம் இறக்குவது என்கிற செயல்திட்டத்துடன் தற்போது முதலே அக்கட்சி மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை களம் இறக்குவது என்கிற செயல்திட்டத்துடன் தற்போது முதலே அக்கட்சி மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.

2011 தேர்தலிலும் சரி 2016 தேர்தலிலும் சரி கூட்டணி கட்சிகளுக்கு திமுக அதிக தொகுதிகளை தாரை வார்த்துவிட்டது என்பது தான் அக்கட்சி தொண்டர்களின் மனக்குமுறலாக இருந்து வருகிறது. கடந்த 2016 தேர்தலில் கூடுதலாக ஒரு 20 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தால் நிச்சயமாக 2006ஐ போல் திமுக கூட்டணி ஆட்சி அமைத்திருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் எழுதித்தள்ளினர். இதே போல் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டதாக திமுகவினரே வேதனையை வெளிப்படுத்தினர்.

ஆனால் எந்த தேர்தல் என்றாலும் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு அதிக தொகுதிகளை வெல்வது என்பது தான் ஜெயலலிதாவின் வியூகமாக இருந்து வருகிறது. கூட்டணி கட்சிகள் எவ்வளவு செல்வாக்குடன் இருந்தாலும் சொற்ப தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி கெத்து காட்டுவதும் ஜெயலலிதாவின் வாடிக்கை. இதே போல் தனக்கு வலுவான கூட்டணி அமையவில்லை என்றாலும் திமுக அப்படி ஒரு கூட்டணி அமைத்துவிடக்கூடாது என்பதிலும் ஜெயலலிதா உறுதியாக இருப்பார்.

அதன் அடிப்படையில் தான்  2016 தேர்தலில் அதிமுகவின் பி டீமாக மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்வது தடுக்கப்பட்டு சொற்ப பெரும்பான்மையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதே பாணியில் இந்த முறை திமுக முன்கூட்டியே சுதாரிப்புடன் செயல்பட முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகள் யார் கூட்டணியில் இருந்தாலும் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்கிற நிபந்தனையை விதிக்க திமுக முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கும் கூட கடந்த முறை கொடுத்த தொகுதிகளில் பாதியை மட்டுமே கொடுப்பது என்கிற முடிவில் திமுக மேலிடம் உள்ளதாக கூறுகிறார்கள். மேலும் திமுகவிற்கு சாதகமான தொகுதிகள் ஒன்றை கூட கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க கூடாது என்கிற வியூகமும் திமுக தரப்பில் வகுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் குறைந்த பட்சம் 200 தொகுதிகளிலாவது திமுக வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எளிதாக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை வெல்ல முடியும் என்று கணக்கு போடுகிறது திமுக மேலிடம்.

காங்கிரஸ் கட்சி மத்தியில் பெரிய அளவில் செல்வாக்குடன் இல்லை. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு பத்து தொகுதிகள் வரை கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் 5 வருடங்களாக காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து திமுக ஆதரவு கொடுத்து வருகிறது. இதனை எல்லாம் சுட்டிக்காட்டி காங்கிரசுக்கு சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை குறைப்பதற்கான காரணங்களை திமுக தற்போதே தயாரித்து வருவதாக சொல்கிறார்கள். இதே போல் மதிமுக வேட்பாளர்கள் எத்தனை பேராக இருந்தாலும் அத்தனை பேரும் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டி என்கிற நிபந்தனையும் வெளிப்படையாக முன்வைக்கப்படும் என்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை ஐந்து தொகுதிகளுக்குள் அவர்களுக்கான கோட்டாவை முடித்துவிடுவது தான் திமுகவின் திட்டம் என்று சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை மிகவும் இழுபறியானால் ஒன்று அல்லது 2 தொகுதிகளை மட்டும் விட்டுக் கொடுக்க திமுக முன்வருமே தவிர கடந்த காலங்களை போல் கூட்டணி கட்சிகள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் திமுக செல்லாது என்று கூறுகிறார்கள். மேலும் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடும் திட்டமும் மு.க.ஸ்டாலின் வசம் இருப்பதாக கூறுகிறார்கள்.

click me!