கந்தசஷ்டி விவகாரத்தில் தீயா வேலை செய்யும் போலீஸ்.. கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த மேலும் இருவர் கைது

By karthikeyan VFirst Published Jul 20, 2020, 9:31 PM IST
Highlights

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய வழக்கில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், இந்து கடவுள் முருகன் பற்றியும் கந்தசஷ்டி கவசம் பற்றியும் அருவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசி வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் நடராஜன் என்பவர் தான் அந்த வீடியோவில் ஆபாசமாக பேசியிருந்தார். 

அந்த வீடியோ, இந்துக்கள் மனதை புண்படுத்தியது மட்டுமல்லாமல் இந்துக்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. அந்த வீடியோ குறித்து, பாஜக சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையிலும் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன், தொடர்ச்சியாக இதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டு, மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நடக்கும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீதும் சுரேந்திரன் நடராஜன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில் சாதி, மதம், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும், கறுப்பர் கூட்டத்திற்கும் சுரேந்திரனுக்கும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முதலில் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்தனர். அதன்பின்னர் தலைமறைவான முக்கியமான நபரான சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தில் ஆய்வு நடத்தி, சில ஆவணங்களை கைப்பற்றிய போலீஸார், அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அங்கு சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குகன் மற்றும் சோமசுந்தரம் ஆகிய கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

click me!