சென்னையில் பெய்த மழையில் நிரம்பிய 14 ஏரிகள்... உயிர் பயத்தில் மக்கள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 17, 2020, 6:50 PM IST
Highlights

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால், சுற்றியுள்ள 14 ஏரிகள் நிரம்பி அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால், சுற்றியுள்ள 14 ஏரிகள் நிரம்பி அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே அவ்வப்போது பெய்த மழையால் சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் ஓரளவு நிரம்பின. ஆனால், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், காட்டாங்கொளத்தூர், குன்றத்தூர், மாங்காடு, ஆவடி, அம்பத்தூரில் தொடர்ந்து மழை பெய்கிறது.

இந்நிலையில், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் செந்தமிழ் நகரில் கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. காவனூர் ஏரி நிரம்பியதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கீழ் தளத்தில் இருப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தெரிந்தவர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

சென்னை புறநகரில் உள்ள இரையூர், செம்பரம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர், கொளப்பாக்கம், அரனேரி, வையூர், புல்லிட்டின்தாங்கல் உள்ளிட்ட 14 ஏரிகள் நிரம்பி வழிகிறது. ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் அடையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் கடும் அவதி சென்னை அடையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த ஆற்றின் கரையோரம் உள்ள வரதராஜபுரம், லட்சுமி நகர், முடிச்சூர், மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

மக்கள் எந்த நேரத்தில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் தூக்கத்தை தொலைத்து விட்டுள்ளனர். குழந்தைகளை வைத்துக் கொண்டு மழை நீரில் அடித்து வரப்படும் விஷ ஜந்துக்களுக்கு அச்சப்பட்டு வரும் சூழல் சென்னையில் நிலவுகிறது.

click me!