ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு... திமுக கோரிக்கையை ஏற்று இன்றே உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

By Asianet TamilFirst Published Jul 3, 2019, 7:10 AM IST
Highlights

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த 11 பேருக்கும் ஏன் நோட்டீஸ்கூட அனுப்பவில்லை’ என்று கேள்வி எழுப்பியிருந்தது. அப்போது அதிமுக என்ற கட்சி பிளவுப்பட்டிருந்தது என்று அதிமுக தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

2017-ல் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

 
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017-ல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். அப்போது சபையில் நடந்த வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இந்த வழக்கை நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்துக்கு வந்த நிலையில், அந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்துவருகிறது. இதற்கிடையே அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வை  நேற்று அணுகியது திமுக தரப்பு. மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்த வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று முறையிட்டார்.


திமுக  தரப்பின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வர இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோரை கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகருக்கு செயல்பாட்டில் தலையிட விரும்பவில்லை என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த 11 பேருக்கும் ஏன் நோட்டீஸ்கூட அனுப்பவில்லை’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. 

click me!