இதுவரை சபரிமலைக்குள் நுழைந்த பெண்கள் எண்ணிக்கை தெரியுமா ? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

By Selvanayagam PFirst Published Jan 12, 2019, 8:34 AM IST
Highlights

சபரிமலையில், இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் தரிசனம் முடித்து விட்டனர் என கேரள அமைச்சர் மணி தெரிவித்துள்ளார். பொதுவாக பிந்து, கனக துர்கா மற்றும் மஞ்சு ஆகிய மூன்று பெண்கள் தான் சபரிமலைக்குக் சென்று வழிபாட்டார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது 100 க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி தரிசனர் செய்துள்ளதாக அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து கேரள அரசு எல்லாப் பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது என முடிவு செய்து அதற்காக அழைப்பு விடுத்தது. இதையடுத்து ஏராளமான பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அய்யப்ப பக்தர்கள் பெண்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்து  நிறுத்தினர்.

ஆனால் பிந்து, கனக துர்கா மற்றும் மஞ்சு உள்ளிட்ட சில பெண்கள் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இது அய்யப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரள மாநில  மின்சாரத் துறை அமைச்சர் மணி,
கொட்டாரக்கரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான பெண்கள் தரிசனம் செய்துவிட்டனர். இன்னும் தரிசனம் நடத்துவார்கள்.  அவர்களுக்கு, போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.

பெண்களின் வயதை அளவீடு செய்யும் கருவி ஒன்றும் சபரிமலையில் இல்லை;வேண்டுமானால், 50 ஆயிரம் பெண்களை, இருமுடி கட்டி சபரிமலைக்கு அழைத்துச் செல்ல, மார்க்சிஸ்ட் கட்சியால் முடியும். தடுக்க யாரும் வரமாட்டார்கள்; ஆனால், அது கட்சியின் வேலை அல்ல. கோவிலுக்கு போக வேண்டும் என நினைப்பவர்கள் போகட்டும்; அதுதான் எங்கள் நிலை என்றார்..

சபரிமலைக்கு பெண்கள் சென்றால், அய்யப்பனின் பிரம்மச்சரியம் கலையும் என கூறுவது ஏமாற்று வேலை. தந்திரிக்கு மனைவி, குழந்தை உண்டு. அதனால், அய்யப்பனுக்கு ஏதாவது நடந்ததா என அவர் கேள்வி எழுப்பினார்.

பந்தளம் அரண்மனைக்கு சொந்தமானது அல்ல சபரிமலை. ஐந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பை செயல்படுத்தும் கடமை, மாநில அரசுக்கு உண்டு. அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, தந்திரிக்கு உண்டு என்று மணி தெரிவித்தார். அமைச்சர் மணியின் பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!