கடந்த 10 நாட்களில் 1 கோடியே 23 ஆயிரம் பேர் பயணம் ..!! 10 கோடி வருமானம் ஈட்டிய மாநகர் போக்குவரத்துக் கழகம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2020, 3:00 PM IST
Highlights

மேலும் பேருந்துகள் உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதோடு, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள், கையடக்க கிருமிநாசினி ஆகியவை தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 1 கோடியே 1 லட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என மாநகர போக்குவரத்து கழக இயக்குனர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 1-9-2020 முதல் அந்தந்த மாவட்ட எல்லைக்குள் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார்கள். அதன்படி மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கம் தொடங்கியது, மேலும் கடந்த 7-9-2020 முதல் மாவட்ட எல்லைக்குள்ளான பேருந்து இயக்கத்தை தளர்த்தி, தமிழகம் முழுவதும் மாநிலத்திற்குள்ளான அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தனிமனித இடைவெளியுடன் பயணம் செய்ய ஏதுவாக பயணிகள் அதிகம் பயணம் செய்யும் தடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை  இயக்கிடவும், கிளை மேலாளர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் பேருந்துகள் உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதோடு, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள், கையடக்க கிருமிநாசினி ஆகியவை தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. முககவசம் இல்லாத பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படு வதில்லை, பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கிருமி நாசினியை பயன்படுத்திய பின்னரே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கடந்த 1-9-2020 அன்று பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டு, அன்றைய தினம் ஏறத்தாழ 6 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ஏறத்தாழ 2400 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். 

குறிப்பாக மின்சார ரயில் சேவை உள்ள புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், மீஞ்சூர், அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ள நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக கடந்த 1-9-2020 முதல் இதுநாள் வரையில் ஒரு கோடியே ஒரு லட்சத்து 73 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக ஏறத்தாழ 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட ப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!