
உத்தரப்பிரதேசத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், இறந்தநாட்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகளில் 15 நாட்களை ரத்து செய்து முதல்வர் ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெரும்பாலான விடுமுறை நாட்கள் முன்பு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி,அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றின் ஆட்சியில் வழங்கப்பட்டு வந்தது.
மக்களின் வாக்கு வங்கியைப் பெறவும், சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரின் ஆதரவைப் பெறவும் இந்த விடுமுறை விடப்பட்டு இருந்தது.
உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடியாக மாற்றங்களை நிர்வாகத்தில் செய்து வருகிறார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆன்ட்டி ரோமியோ படை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஆதித்யநாத், பள்ளிகளில் வேலை நாட்கள் குறைந்துவிட்டன. தேவையில்லாமல் தலைவர்கள் பிறந்த, நினைவு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. தலைவர்களின் பிறந்தநாட்களில் அவர்கள் குறித்து மாணவரகளுக்கு தெரிவித்தால் தெரிந்து கொள்ள முடியும். ஆண்டுக்கு 220 நாட்கள் பள்ளிகள் நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் இப்போது ஆண்டுக்கு 42 நாட்கள் மாநில அரசு விடுமுறையாக விடப்படுகிறது.இதில் 17 நாட்கள் தலைவர்களின் பிறந்த நாளுக்கு விடப்பட்டு வந்தது.
இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகளில் அதிக நாட்கள் வேலை நாட்கள் நடத்த வேண்டும் என்பதைக் கருதி தலைவர்களின் பிறந்தநாளுக்கு விடப்பட்டு வந்த விடுமுறையில் 15 நாட்களை முதல்வர் ஆதித்யநாத் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இனி இந்த தலைவர்களின் பிறந்தநாட்களில் அவர்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார்.