இவங்க ஆட்சியில் புதுச்சேரி கொலை நகரமாக மாறிவிட்டது... நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!!

By Narendran S  |  First Published May 29, 2022, 7:25 PM IST

ரங்கசாமி முதல்வராக வரும் போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக மாறிவிடுவதாக முன்னாள் அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். 


ரங்கசாமி முதல்வராக வரும் போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக மாறிவிடுவதாக முன்னாள் அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேடையில் வைத்து பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதற்கு பலர் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அநாகரீகமாக நடந்து கொண்டார் என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வருமான நாராயணசாமி, மு.க.ஸ்டாலின் செய்ததில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் விழாவில் முதல்வர் ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசு வைக்க வேண்டும்,  கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். பிரதமர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்லும் போது அந்தந்த மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைப்பது வழக்கம். ஆனால் பாஜகவினர் இதனை பெரிது படுத்தி விமர்சனம் செய்கிறார்கள். முதல்வர் என்ற முறையில் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக தன் கடமையைச் செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எப்போதெல்லாம் முதல்வராக ரங்கசாமி வருகிறாரோ அப்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக ஆகிவிடுகிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது.  அமைச்சரவையிலும் ஊழல் இருப்பதால் அதிகாரிகளும் ஊழல் செய்கிறார்கள். நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியவில்லை. மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்றுத்தர தெம்பு, திராணி அவர்களுக்கு இல்லை. பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகின்றார் ரங்கசாமி என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

click me!