முகக்கவசம் அணியாவிட்டால் 3 ஆண்டு சிறை..! நகராட்சி ஆணையர் அதிரடி..!

By Manikandan S R SFirst Published Apr 13, 2020, 2:51 PM IST
Highlights

மக்கள் முகக் கவசம் அணியாமல் வெளி வந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 9,152 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 308 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று பலியானவர்களின் எண்ணிக்கை 273 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா பரவுதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நாளையுடன் அது நிறைவடையும் தருவாயில் மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளி வர வேண்டும் என்றும் அவ்வாறு வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டுமெனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ஆனாலும் பலர் கொரோனா வைரசின் வீரியம் உணராமல் முகக் கவசம் இல்லாமல் சுற்றித் திரிகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத் நகராட்சியில் அதிரடி தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் முகக் கவசம் அணியாமல் வெளி வந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த உத்தரவு கொடிய நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா தெரிவித்திருக்கிறார். 

click me!