ஒற்றுமை இப்படித் தான் இருக்கனும்... கர்நாடகா எம்.எல்.ஏ. செய்த காரியம்... வைரலாகும் வேற லெவல் வீடியோ..!

By Kevin KaarkiFirst Published May 23, 2022, 11:18 AM IST
Highlights

சட்டமன்ற உறுப்பினர் ஜமீர் அகமது கான், மதம் மற்றும் சாதியை வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என கூறினார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் மத சட்டமன்ற  உறுப்பினர் தலித் சமூகத்தை சேர்ந்த சாமியாருக்கு இனிப்பு ஊட்டினார். சாமியார் அதை மென்று விழுங்கும் முன், குறுக்கிட்ட எம்.எல்.ஏ. அவர் ஊட்டிய இனிப்பை வாயில் இருந்து எடுத்து தனக்கு ஊட்ட செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஒற்றுமை இப்படித் தான் இருக்க வேண்டும் என கூறி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

பெங்களூரில் உள்ள சாம்ராஜ்பெட் பகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜமீர்அகமது கான் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஈது மிலான் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜமீர் அகமது கான், மதம் மற்றும் சாதியை வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என கூறினார். 

இனிப்பு வழங்கல்:

பேசிக் கொண்டு இருக்கும் போதே, மேசையில் வைக்கப்பட்டு இருந்த இனிப்புகளை ஜமீர்அகமது கான் பார்த்தார். உடனே இனிப்புகளை எடுத்து, அவரின் அருகில் அமர்ந்து கொண்டு இருந்த தலித் சாமியருக்கு ஊட்டி விட்டார். சாமியார் இனிப்பை சுவைக்க துவங்கினார். நொடிகளில் சாமியாரை தடுத்து நிறுத்திய ஜமீர்அகமது கான், தனக்கும் இனிப்பு ஊட்ட வலியுறுத்தினார். 

Super hero of Karnataka 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/i28LDldDge

— ranju ranjith (@ranjura46497939)

உடனே சாமியார் தட்டில் வைக்கப்பட்டு இருந்த இனிப்பை எடுக்க முற்பட்டார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜமீர்அகமது கான், சாமியார் சுவைத்துக் கொண்டு இருந்த இனிப்பை வாயில் இருந்து எடுத்து தனக்கு ஊட்டுமாறு கூறினார். இதை கேட்டு அதிர்ந்து போன சாமியார், சில நொடிகளில் அவ்வாறே செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முன்னாள் அமைச்சர்:

இவர்களின் இந்த செயலுக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கை தட்டி தங்களின் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜமீர் அகமது கான், முன்னாள் உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். 

click me!