
வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று கம்பி நீட்டி, லண்டனில் தலைமறைவாக இருந்துவரும் விஜய் மல்லையாவை கைது செய்து அழைத்து வர அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. அதிகாரிகள் கொண்ட குழு லண்டனை அடைந்துள்ளனர்.
தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் விமானநிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன்பெற்று இருந்தார். அதைத் திருப்பிச் செலுத்தாததையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், விஜய் மல்லையா கடந்த பிப்ரவரி 6-ந்தேதி இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பி ஓடினார்.
அதன்பின் பல்வேறு செக் மோசடி வழக்குகளிலும், நிதி மோசடி வழக்குகளிலும், அமலாக்கப்பிரிவு தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளிலும் ஆஜராக நீதிமன்றம் ஆணையிட்டும் மல்லையா ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிமன்றம் மூலம் தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்பட்டார். இதனால், லண்டனில் இருந்தபடியே தனது எம்.பி. பதவியை மல்லையா ராஜினாமா செய்தார். மேலும், இவரின் பாஸ்போர்ட்டையும் மத்திய அரசு முடக்கி, இந்தியா கொண்டு வர இங்கிலாந்து அரசு மூலம் நடவடிக்கை எடுத்தது.
அதன் பலனாக, கடந்த மாதம் 17-ந்தேதி ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார், இந்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், விஜய் மல்லையாவை கைது செய்து, வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், 3 மணிநேரத்தில் ஜாமீன் பெற்று மல்லையா வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில், சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட குழு இன்று லண்டன் சென்று சேர்ந்துள்ளனர். சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் ராகேஸ் அஸ்தானா தலைமையில் சென்றுள்ள இந்த குழுவினர் இங்கிலாந்து அதிகாரிகளுடன் பேசி மல்லையாவை இந்தியா கொண்டு வரும் பணியில் ஈடுபட உள்ளனர்.
தற்போது மல்லையா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமினில் இருப்பதால், இந்திய அதிகாரிகள், இங்கிலாந்து வழக்கறிஞர் மூலம், நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்தியா கொண்டு செல்வதற்கான பணிகளை மேற்கொள்வார்கள்.
விஜய் மல்லையாவை கைது செய்து இந்தியா அழைத்து வருவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கிவிட்டதால், விரைவில் இந்திய அதிகாரிகள் நீதிமன்றத்தை அனுகுவார்கள் எனத் தெரிகிறது.
விஜய் மல்லையா தனது முதல் கட்ட விசாரணையில் மேல்முறையீடு செய்ய விரும்பினால் வழக்கு இழுத்துக்கொண்டே செல்லும். அந்த வழக்கில் இறுதி முடிவு எட்ட உச்ச நீதிமன்றம் வரை கூட செல்ல விஜய் மல்லையாவுக்கு உரிமை இருக்கிறது.
ஏனென்றால், விஜய் மல்லையா லண்டன் குடியுரிமை பெற்றவர் என்பதால், அவரை எளிதாக அங்கிருந்து கிளப்ப முடியாது என்கிறார்கள் இங்கிலாந்து அதிகாரிகள். ஆதலால், மல்லையாவை உடனடியாக இந்தியா கொண்டு வருவது இயலாது.