ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம், செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு குறித்த தனது ஆர்வத்தை அதிபர் ஜோ பைடன் வெளிப்படுத்தினார்.
இந்தியா நடத்தும் G20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வருகிறார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லு, அதிபர் பைடன் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு செல்வார் என்று கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தலைநகர் டெல்லி ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை ஒரு வருடத்திற்கு ஜி20 தலைவர் பதவியை ஏற்று, நாடு முழுவதும் பல கூட்டங்களை நடத்தி வருகிறது.
ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட போது, செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறினார்.
ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள், பலவீனம் மற்றும் மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை சமாளிக்க பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் புதுப்பிக்கப்பட்ட கவனம் ஏற்பட்டுள்ளதாக ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் நிலையான வளர்ச்சி இலக்குகள் கொண்டிருப்பதாகவும் இருநாட்டு நட்புறவின் மூலம் வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாவும் இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.