10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை ஏன் அமல்படுத்தவில்லை; பாஜக கேள்வி!!

By Dhanalakshmi GFirst Published Feb 14, 2024, 1:26 PM IST
Highlights

விவசாயிகளின் நலனில் அக்கறையுடன் காங்கிரஸ் செயல்பட்டு இருந்தால் சுவாமிநாதன் பரிந்துரைத்து இருந்த கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. 

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது தொடர்பாக சுவாமிநாதன் கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை 2004-06ஆம் ஆண்டுகளில் அளித்து இருந்தது. ஆனால் அவற்றை அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏற்றுக் கொள்ளவில்லை. அமல்படுத்தவும் இல்லை. 

சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையில் விவசாய விளைபொருட்களுக்கு ஆகும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டு இருந்தன. முக்கியமாக இந்த பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று தற்போது அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி நகருக்குள் புகுந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு விவசாயிகளும் இந்த பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். இத்துடன், சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் மின்சாரம் திருத்த மசோதா, கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

'பிரதமர் மோடி பஞ்சாப் வந்தால் தப்பிச் செல்ல முடியாது': விவசாயிகள் போராட்டத்தில் பகிரங்க மிரட்டல்

இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்து ஆலோசிக்காமல் இதை அமல்படுத்த முடியாது என்று பாஜக திட்டவட்டமாக கூறியது. இதைத் தொடர்ந்து, எதிர்கொண்டு இருக்கும் தேர்தலில்  காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால்  சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்து இருந்த குறைந்தபட்ச ஆதரவு விலை அமல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார். 

இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டில் பதில் அளித்து இருந்த மோடி அரசு, சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்து இருந்த குறைந்தபட்ச ஆதரவு விலைதான் புதிய விவசாய சட்டத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்து இருந்தது.

6 மாசத்துக்கு உணவு, எரிபொருள் இருக்கு... நீண்ட போராட்டத்துக்குத் தயாராக வந்த விவசாயிகள்!

சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையில் விவசாயிகளுக்கான தேசிய கமிஷன் வரைவின் அடிப்படையில், விவசாயத்தின் பொருளாதார நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், விவசாயிகளின் நிகர வருமானத்தை அதிகரிக்கவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், பல்வேறு இயற்கை வளங்களுடன் கூடிய சொத்து சீர்திருத்தங்கள், நல்ல தரமான விதைகள் வழங்குதல், சரியான நேரத்தில் மற்றும் போதுமான நிறுவனக் கடன்கள் வழங்குதல், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதுகாப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலையை  திறம்பட செயல்படுத்துதல் போன்றவை அடங்கும். 

2007ல் இறுதி செய்யப்பட்ட விவசாயிகளுக்கான தேசியக் கொள்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழுமையற்ற நிலச் சீர்திருத்தங்கள், தண்ணீரின் அளவு மற்றும் தரம், தொழில்நுட்ப தொய்வால் ஏற்படும் விவசாய நெருக்கடி விவசாயிகளின் தற்கொலைகளுக்கு இட்டுச் செல்கிறது என்று கமிட்டி தெரிவித்து இருந்தது. நாட்டின் அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் 'விவசாயம்' சேர்க்க வேண்டும் என்று விவசாயிகளுக்கான தேசிய கமிஷன் அழைப்பு விடுத்திருந்தது. இதுவும் சேர்க்கப்படவில்லை.

இதைத்தான் தற்போது பாஜக அரசு கேள்வி எழுப்பியுள்ளது. பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக அரசு ஏன் சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கூறுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாஜக அரசு, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020, வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா 2020 ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை புதிதாக கொண்டு வந்தது. இதை எதிர்த்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர். குறிப்பாக பஞ்சாப், அரியானா விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தினால், சுமார் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, 2021-ல் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் பாஜக அரசு திரும்பப்பெற்றது. தற்போது மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

click me!