
ஜம்மு காஷ்மீரில் நேற்று நடந்து துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் தளபதி உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதலின்போது தவறுதலாக குண்டுக்காயம் பட்டதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தார்கள்.
காவல்நிலைய தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் இருக்கும் அசாபலில் கடந்த மாதம் 16-ந் தேதி தீவிரவாதிகள் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் துணை காவல் ஆய்வாளர் பெரோஸ் அகமது தார் உள்பட 6 போலீசார் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் - இ - தொய்பா அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதன் பின்னணியில் லஷ்கர் அமைப்பின் தளபதியாக இருந்த பசிர் லஷ்கரியை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.
கிராமத்தில் பதுங்கல்
இந்த நிலையில், பசிர் உள்ளிட்ட தீவிரவாதிகள் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிரேந்தி – பத்போரா கிராமத்தில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கிராமத்திற்கு சென்ற வீரர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பிணைக் கைதிகள்
பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்த தீவிரவாதிகள் பொதுமக்கள் 17 பேரை நேற்று காலை பிணைக் கைதிகளாக ஒரு வீட்டில் பிடித்து வைத்துக் கொண்டனர். இதையடுத்து, பல்வேறு திட்டங்களை வகுத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட ஆரம்பித்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சண்டையில் லஷ்கர் அமைப்பின் தளபதி பசிர் லஷ்கரி மற்றும் அசாத் தாதா ஆகிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
மருத்துவமனையில் அனுமதி
துப்பாக்கி குண்டு தவறுதலாக சென்று தாக்கியதில் தகிரா என்பவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை பாதுகாப்பு படையினர் அருகில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, சண்டை நடந்த இடத்தில் வன்முறையாளர்கள் சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சதாப் அகமது சோபான் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.