சபரிமலை கோவிலுக்குள் முதன்முதலாய் நுழைந்த திருநங்கைகள் !! 18 ஆம் படியேறி தரிசனம் !!

By Selvanayagam P  |  First Published Dec 18, 2018, 8:54 PM IST

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் இன்று நான்கு திருநங்கைகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர்.


சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது. இதை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பக்தர்கள் போராட்டம் காரணமாக இதுவரை இளம்பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சபரிமலைக்கு எரிமேலி வழியாக அனன்யா, திருப்தி, ரஞ்சுமோள், அவந்திகா ஆகிய 4 திருநங்கைகள் கருப்புச் சேலை அணிந்து தலையில் இருமுடி கட்டுடன் சாமி தரிசனத்துக்காக சென்று கொண்டிருந்தனர். இவர்களை இளம்பெண்கள் என்று நினைத்து ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும்  திருநங்கைகளை திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து திருநங்கைகள் 4 பேரும் கேரள போலீஸ் ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாமை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அதில் தங்களை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். அதேபோல சபரிமலை நிலவரத்தை ஆய்வு செய்ய கேரள உயர்நீதிமன்றம்  நியமித்த குழுவைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரனிடமும் இந்த திருநங்கைகள் மனு கொடுத்தனர்.

திருநங்கைகள் சபரிமலையில் செல்ல நீதிமன்ற தடை எதுவும் இல்லாததால் அவர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த திருநங்கைகள் 4 பேரும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய போலீசார் அனுமதி வழங்கினர்.

இன்று காலை 8 மணிக்கு திருநங்கைகள் 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்கு சென்றனர். கருப்பு சேலை அணிந்து, தலையில் இருமுடி கட்டுடன் சென்ற அவர்கள் 18-ம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். நெய் அபிஷேகமும் செய்தனர்.

click me!