டிரைவிங் லைசென்ஸ் வாங்க இனி கல்வித் தகுதி தேவையில்லை ! மத்திய அரசு அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jun 18, 2019, 11:12 PM IST
Highlights

போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான டிரைவிங் 'லைசென்ஸ்' பெறுவதற்கு உள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது படித்தவர்களுக்குத் தான் லைசென்ஸ் என்ற முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு, குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இந்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , கிராமப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு உள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கப்படுகிறது.

இதன் மூலம், கிராமப் பகுதிகளில் உள்ள, படிக்காத, அதே நேரத்தில், திறன் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதையடுத்து, இந்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

அதே நேரத்தில், வாகனத்தை இயக்குவதற்கான திறன் இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகள் தொடர்பாக அறிந்திருக்க வேண்டும். அதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

போக்குவரத்து பயிற்சிப் பள்ளிகளில் முறையாக பயிற்சி பெற வேண்டும் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

click me!