
திருப்பதி ஸ்ரீ வெங்டேஸ்வரா கோயில் லட்டுக்கு இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின்(எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) சான்றிதழ் கிடைத்துள்ளது.
திருப்பதியில் புகழ்பெற்ற ஸ்ரீ வெங்டேஸ்வரா கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இங்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. லட்டு விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு குறிப்பிடத்தகுந்த வருவாய் கிடைத்து வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு 10.46 கோடி லட்டுகள் விற்பனையாகின. 2017ம் ஆண்டு லட்டு மூலம் ரூ.165 கோடி ஈட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் ஒருவர், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையத்துக்கு சமீபத்தில் ஒரு புகார் அனுப்பி இருந்தார்.
அதில், “ கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் முறையான பாதுகாப்பு, தரம் தொடர்பான விஷயங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை. இதில் ஈடுபட்டுள்ள சமையல் அறை ஊழியர்கள் சுகாதாரமின்றியும், வியர்வை வழிந்த உடலோடும், முறையான ஆடைகள், கையுறைகள் இன்றியும் லட்டு தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். இதனால் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு சுகாதாரமான சூழலில் தயாரிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது’’ என்றுகேட்டு இருந்தார்.
மேலும், கடந்த காலங்களில் திருப்பதி லட்டுவில் கீ செயின், சேப்டிபின், பான்மசாலா பாக்கெட்உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அது சர்ச்சையானது.
இதையடுத்து, லட்டுக்கு முக்கியப் பொருளான ‘ பொட்டு’ தயாரிப்பை ஆய்வு செய்யக்கோரி சென்னையில் உள்ள உணவுப் பாதுகாப்பு தர ஆணைய மண்டல அலுவலகத்துக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. நிறுவனம் உத்தரவிட்டது.
ஆனால், திருப்பதி தேவஸ்தானம் வெளியாட்களை லட்டு தயாரிக்கும் சமையல் அறைக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டது. மேலும் இந்திய உணவுபாதுகாப்பு மற்றும் தரச் சான்றிதழ் பெறும் முதலில் மறுத்துவிட்டது.
அதன்பின் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தனது நிலையில் இருந்து கீழிறங்கி, வந்து தரச்சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து இப்போது பெற்றுள்ளது.
இதையடுத்து, இனி வரும் காலங்களில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் விதிமுறைகளின் அடிப்படையில்தான் இனி லட்டுகளை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.