
திருப்பதி தேவஸ்தானத்தில் பலத்த பாதுகாப்பையும் மீறி, விஐபி வரிசையில் வாலிபர் சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் காலை நைவேத்தியத்திற்கு பிறகு முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் பெற்றவர்கள் தேவஸ்தான இணை செயல் அலுவலர் அல்லது அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பரிந்துரையின் படி ரூ.500 கட்டணம் செலுத்தி விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஐபி தரிசன வரிசையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பேண்ட், சட்டை அணிந்தபடி சென்றார். விஐபி தரிசனத்திற்கு செல்பவர்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மட்டுமே அணிந்து செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
ஆனால் அந்த வாலிபர், சர்வ சாதாரணமாக சென்றார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை. வைகுண்டம் அருகே அவர் சென்றபோது, அங்கிருந்த தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ, அந்த நபரை அழைத்து விசாரித்தார்.
அப்போது, அவரிடம் விஐபி தரிசனத்திற்கான டிக்கெட் இல்லை என்பதும், அவர் திருமலையில் சுவாமி படம், சுவாமி கயிறு விற்பனை செய்பவர் என தெரிந்தது. இதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
விஐபி தரிசன வரிசையில் 3 இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், 4 இடங்களில் சோதனையும் நடக்கிறது. ஆனால் டிக்கெட் இல்லாமலும், பாரம்பரிய உடை இல்லாமலும் ஒரு வாலிபர் இத்தனை சோதனைகளையும் தாண்டி எப்படி வந்தார் என விளக்கம் கேட்டும், பணியில் அலட்சியமாக இருந்த பாதுகாப்பு அலுவலர்கள் 4 பேருக்கு தேவஸ்தானம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவோம் என அச்சுறுத்தி வரும் நிலையில் டிக்கெட் இல்லாமல், பாரம்பரிய உடை இல்லாமல் ஒருவர் விஐபி தரிசன வரிசையில் வைகுண்டம் வரை சென்ற சம்பவம் தேவஸ்தான அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.