திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்…. இருபத்தெட்டரை கிலோ தங்க காசு மாலை காணிக்கை…..

First Published Jul 9, 2018, 10:11 AM IST
Highlights
Thirupathi temple Kumbabishgam august 16th Gold coin garland gift


திருப்பதி ஏழுமலையான் கோவில்  கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 8 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க காசு மாலையை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். இது திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பொதுவாக அனைத்து கோவில்களிலும் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.



அதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி ஆகஸ்டு 11-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது.

இதனையொட்டி ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அன்றைய நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனமும் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் 16-ந் தேதி காலை 10.16 மணியளவில் துலா லக்னத்தில் மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது.

இந்நிலையில் திருப்பதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விஜயவாடாவை  சார்ந்த தொழில் அதிபர் மன் தென  இராமலிங்க ராஜு , 1008  தங்க காசுகளால் உருவாக்கப்பட்ட  தங்க காசு மாலையை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

இந்த தங்க காசு மாலை 28.645.100 கிராம் எடை கொண்டது. 1008 தங்க காசுகள் கொண்டு மாலை உருவாக்கப்பட்டுள்ளது. 5 ஆரங்களைக் கொண்ட இந்த மாலை முதல் ஆரத்தில் : 184 காசுகள் , இரண்டாவது ஆரத்தில்  192 காசுகள் , மூன்றாவது ஆரத்தில்  201 காசுகள் , நான்காவது ஆரத்தில்  212 காசுகள்  மற்றும்  ஐந்தாவது ஆரத்தில்  219 காசுகள்  கொண்டு செய்யப்பட்டுள்ளது.

இந்த தங்க காசு மாலையின்  மதிப்பு  8 கோடியே 11 லட்சத்து51 ஆயிரத்து 568 ரூபாய், இதற்கான செய்கூலி 27 லட்சத்து 49 ஆயிரத்து 930 ரூபாய் என ஆக மொத்தம் 8 கோடியே  39 லட்சத்து 14 ஆயிரத்து 798 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காசு மாலையை  தொழில் அதிபர் மன் தென  இராமலிங்க ராஜு  திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைத்தார். கும்பாபிஷேகத்தின்போது  இந்த காசு மாலை சாமிக்கு சாற்றப்படும் என தெரிகிறது.

click me!