பக்தர்களின் பார்வைக்கு ஏழுமலையானின் நகைகள்...! ரமண தீட்சிதர் புகாரை அடுத்து திருப்பதி தேவஸ்தானம் முடிவு...!

First Published Jun 6, 2018, 12:12 PM IST
Highlights
Thirupathi Ezhumalaiyan Jewelery to the sight of devotees


திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சராக இருந்து வந்த ரமண தீட்சிதர், ஏழுமலையானின் பல நகைகள் காணவில்லை என்று புகார் எழுப்பியதை அடுத்து, ஏழுமலையானின் நகைகளை பக்தர்களின் பார்வைக்கு வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி - திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த கூட்டத்தில், நகை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தேவஸ்தான தலைமை அர்ச்சகராக பதவி வகித்து வந்த ரமண தீட்சிதர், ஏழுமலையான் நகைகள் பல மாயமாகிவிட்டதாகவும், மைசூர் மகாராஜா காணிக்கையாக அளித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கல் காணவில்லை என்றும் புகார் எழுப்பியிருந்தார். இந்த நிலையில், அறங்காவலர் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்துக்குப் பிறகு, திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏழுமலையானின் அனைத்து நகைகளையும் பக்தர்களின் கண்காட்சிக்கு வைக்க அறங்காவலர் குழுவில் ஒருமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். 
ஆனால், நகைகள் பக்தர்களின் கண்காட்சிக்கு வைக்க ஆகம விதிகள் ஒப்புக்கொள்கிறதா என்பதை அறிய, ஆகம வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்கப்பட உள்ளது என்றார். அதேபோல், சட்ட வல்லுநர்களிடமும் அலோசனை கேட்கவுள்ளோம். இதுதொடர்பான அறிவிப்பு பிறகு வெளியிடப்படும் என்று கூறினார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜய நகர பேரரசர்கள், மைசூர் மகாராஜாக்கள், ஆங்கிலேயர்கள், நவாப்புகள், ஜமீன்கள்,
மிராசுதாரர்கள் உட்பட தற்போதைய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலர் கோடிக்கணக்கிலான தங்க, வைர ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி
உள்ளனர். இதன் மதிப்பு பல்லாயிரம் கோடி இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

click me!