இந்த பட்ஜெட் ஏழை மக்களுக்கா? இல்ல கார்ப்பரேட்க்கா? அக்கக்கா பிரித்தெடுத்த திருமா...

By sathish kFirst Published Jul 6, 2019, 11:06 AM IST
Highlights

மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு தோழனாகவும் , ஏழை எளிய மக்களுக்குப் பகைவனாகவும் விளங்குகிறது, இந்த பட்ஜெட்டின் மூலம் பணக்காரர்கள் பயனடைவார்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் என  மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் திருமாவளவன்.
 

மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு தோழனாகவும் , ஏழை எளிய மக்களுக்குப் பகைவனாகவும் விளங்குகிறது, இந்த பட்ஜெட்டின் மூலம் பணக்காரர்கள் பயனடைவார்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் என  மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் திருமாவளவன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வழிவகுக்காத, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு எந்த ஏற்பாட்டையும் செய்யாத, மக்களுக்கு விரோதமான நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை தலைவிரித்தாடுவதை மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன . நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாக மத்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகவும், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாககவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதற்கு மாறாக பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்கின்ற, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கின்ற அறிவிப்புகளே இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு தோழனாகவும் , ஏழை எளிய மக்களுக்குப் பகைவனாகவும் விளங்கும் அரசு என நாம் பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறோம். அது இந்த நிதிநிலை அறிக்கையிலும் உறுதிப்பட்டுள்ளது .

250 கோடி ரூபாய் வரை வரவு செலவு செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டு வந்தது . அதை இப்போது 400 கோடி ரூபாய் அளவுக்கு வரவு செலவு செய்யும் நிறுவனங்களுக்கு மோடி அரசு விரிவுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம் பணக்காரர்கள் பயனடைவார்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும்.

பெட்ரோல், டீசல் மீது ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பவர்களை மட்டுமல்ல பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களையும் பாதிக்கும். அத்துடன் பொருட்களின் விலையையும் உயரச்செய்யும். இது மோடி அரசின் மக்கள் விரோதப் போக்குக்கு ஒரு சான்றாகும்.

மாத ஊதியம் வாங்குபவர்கள் வருமான வரி விலக்கு அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அதில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

நிதி அமைச்சராகப் பெண் ஒருவர் முழுமையான பொறுப்பில் முதல்முறையாக வந்திருக்கிறார். எனவே மகளிருக்கென சிறப்புச் சலுகை அறிவிக்கப்படக்கூடும் என நாடே எதிர்பார்த்தது. அதுவும் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

இன்சூரன்ஸ் துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு ; பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது, ஊடகத்துறையில் அன்னிய நேரடி முதலீடு என்ற அறிவிப்புகள் இந்த அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் அரசு என்பதற்குச் சான்றுகளாகும்.மொத்தத்தில் இது ஒரு மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைபாடாகும் எனக் கூறியுள்ளார்.

click me!