
உலகில் விலை மதிக்க முடியாதது குழந்தையின் புன்னகை. அந்த புன்னகை எத்தகைய மனச்சோர்வையும், சோகத்தையும் மறக்கடித்து விடும். குழந்தையின் ‘மெஸ்மரிஸ’ புன்னகைக்கு மயங்காதவர்களும் உண்டா? என்றுதான் கேட்க வேண்டும். அப்படித்தான் ஐதராபாத்போலீசாருக்கும் இந்த குழந்தையின் புன்னகை அமைந்துவிட்டது.
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஹுமேரா பேகம். இவரின் 4 மாத குழந்தை பைசன்கான். ஐதராபாதில் சாலை ஓரத்தில் ஹுமேரா பேகம் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டு இருக்கும் போது, குழந்தை பைசன்கானை யாரை திருடிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து, ஹுமேரா பேகம், நம்பள்ளி போலீஸ் நிலையத்தில் குழந்தை காணாமல் போனது குறித்து புகார் செய்தார். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், 15 மணிநேரத்தில் குழந்தையை மீட்டனர்.
குழந்தையை கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4மாத குழந்தை பைசன்கானையும் பத்திரமாக போலீசார் மீட்டனர்.
போலீசார் அந்த குழந்தையை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய்குமாரிடம் கொடுத்தபோது, அவர் அந்த குழந்தையை வாங்கி கையில் ஏந்தியவுடன் அந்த குழந்தை சிரித்த சிரிப்பில் மனிதர் சொக்கிப்போய்விட்டார். பொக்கைவாயுடன் குழந்தை பைசன்கான்சிரித்தவுடன் இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் தனது பணியை மறந்து கொஞ்சத் தொடங்கினார். குழந்தையை கண்டுபிடிக்க 15 மணிநேரம் இடைவிடாத அலைந்த போலீசாருக்கு இதைப் பார்த்தவுடன் போலீசாரின் முகத்தில் களைப்பு நீங்கி புன்னகை பூத்தது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சஞ்சய்குமார் கூறுகையில், “ குழந்தைபைசன்கான் அழுதுகொண்டிருந்தான், என் கைகளில் ஏந்தியவுடன் திடீரென அமைதியாகி, என்னை பார்த்தான். பின் தனது பொக்கைவாயோடு என்னைப் பார்த்து சிரித்தான். இந்த சிரிப்பு என் மனது முழுவதும் மகிழ்ச்சியை நிறைத்துவிட்டது. இந்த சிரிப்பை அருகில் இருந்த புகைப்படக்காரர்கள் படம்பிடித்தாலும், என் மனதில் எப்போதும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும்’’ என்றார்.
மேலும், இந்த புகைப்படத்தை போலீசார் சமூக ஊடகங்களில்வௌியிட்டவுடன் வைரலாகப் பரவியது. தெலங்கானா போலீசின் உயர் அதிகாரிகள் ஏராளமானோர் இந்த புகைப்படத்தை பார்த்து ரசித்து, பாராட்டியுள்ளனர். மேலும், பேஸ்புக்கிலும் ஏராளமான லைக் கிடைத்து வருகிறது.