
கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே ஒரு வீட்டில் கொள்ளை அடித்த திருடர்கள், பின் அந்த நகைகளை வீட்டு உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைத்து, அறிவுரை கூறிய சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு அருகே அடுமரோலி எனும் நகர் உள்ளது. இங்கு வசிக்கும் சேகர் குந்தர் என்பவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியே சென்று இருந்தார். அப்போது, இவர்கள் இல்லாத நேரம் பார்த்து வந்த திருடர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, வீட்டில் இருந்த நகைகள், ரூ.13 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இவர்கள் கொள்ளையடிக்கும் போது வெளியில் தொடர்மழை பெய்ததால், அந்த சத்தத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எந்த சத்தகமும் கேட்கவில்லை.
இந்நிலையில் வெளியே சென்று திரும்பிய சேகர் திரும்பி வந்து வீட்டைப் பார்த்தபோது, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் சேகர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கைரேகை, மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் சேகரும், அவரின் மனைவியும் வீட்டின் முன் அமர்ந்திருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் திடீரென வீட்டின் வாசலில் ஒரு பையை தூக்கி வீசி சென்றனர். இதைப் பார்த்த சேகரும், அவரின் மனைவியும் அந்த பையை எடுத்துப் பிரித்துப் பார்த்த போது,அதில் தனது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அந்த பையில் ஒரு கடிதமும் இருந்தது. அதில், “ இது போல் அதிக மதிப்புடைய தங்க நகைகளை வீட்டில் வைக்காதீர்கள். இந்த நகைகளை பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருங்கள்’’ என்று எழுதப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசாருக்கு சேகர்தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தனர்.