
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த ஆதரவான சட்டத்துக்கும் உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவோம், விரைவில் வழக்கு தொடருவோம் என்று பீட்டா இந்தியா விலங்குகள் நல அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தடை
தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்று இந்திய விலங்குகள் நல வாரியத்தோடு இணைந்து,பீட்டா அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்று இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் இளைஞர்கள் தன் எழுச்சியாக நடத்திய போராட்டத்தின் விளைவாக அவசரச்சட்டம் இயற்றி, ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக அரசு நடத்தியது.
ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியபின் ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததில் மாற்றம் தெரிகிறதா?
ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தில் புதிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப்போட்டிகளிலும் பலர் மாடு முட்டி உயிரிழந்தனர், ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர், மாடுகளும் பலியாகின. இந்த விளையாட்டின் கொடுரத்தை எந்த சட்டமும் திருத்தவில்லை.
புதிதாக கொண்டு வந்த சட்டங்களில் வீரர்களையும், மாடுகளையும் பாதுகாக்க அம்சங்கள் இருக்கிறதா?
கடந்த 6 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் 43 பேர் உயிரிழந்துள்ளனர், 5 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த முறை ஜல்லிகட்டுப்போட்டியிலும் மாடுகளை துன்புறுத்தும் செயல்கள் நடந்துள்ளன, இதில் கொஞ்சமும் மாற்றம் இல்ைல, சட்டத்தையும் மீறினர்.
புதிதாக கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்தில் எதுவும் புதிய விதிமுறைகள் இல்லை. வீரர்களையும், மாடுகளையும் காப்பதற்கு போதுமான சட்ட அம்சங்களும் இல்லை. கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழக ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ளதுபோல் இருக்கிறது.
ஜல்லிக்கட்டுப்போட்டியில் எந்த அளவுக்கு துன்புறுத்தல்கள், வன்முறைகள் நடக்கின்றன என்பதை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தொலைக்காட்சியை ஆன்-செய்தவுடன் அனைத்தும் தெரிந்ததே. மாடுகளுக்கு கூட்டத்தைப் பார்த்தவுடனே, இயற்கையாகவே ஒருவிதமான நடுக்கம் ஏற்படும். அந்த நடுக்கத்தை மனிதர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஈடுபடுத்தி துரத்துகிறார்கள்.
தமிழக அரசு கொண்டு வந்த புதிய ஜல்லிக்கட்டு சட்டம் குறித்து உங்கள் கருத்து?
கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச்சட்டம் போலவே இதுவும் இருக்கிறது. இந்த சட்டம் 1960ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மருகவதை தடைச்சட்டத்தை மீறுவதுபோல் இருக்கிறது. புதிதாக கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டு தடைச் சட்டத்துக்கும் உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஏன் இன்னும் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா அமைப்பு வழக்கு தொடரவில்லை?
ஜல்லிக்கட்டுப் போட்டி இந்த ஆண்டு எப்படி நடக்கிறது என்பதை கூர்ந்து கவனித்து வருகிறோம். இதை அடிப்படையாக வைத்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.