சோலார் பேனல் ஊழல் விவகாரம் - உம்மன் சாண்டிக்கு எதிராக புதிய விசாரணைக்கு உத்தரவு

First Published Oct 11, 2017, 9:48 PM IST
Highlights
the kerala government order to investigate to umman chandi about solar issue


சோலார் பேனல் ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு எதிராக, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் புதிய விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.

கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், இந்த தகவலை நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது-

ஊழல் அம்பலம்

சோலார் மின் தகடு ஊழலில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கை கடந்த மாதம் கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

உம்மன்சாண்டி நேரடியாகவும், மற்றும் அவரது 4 உதவியாளர்கள் மூலமும் முக்கிய குற்றவாளி சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணனின் நிறுவனத்திற்கு உதவியது பற்றி அந்த அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

6 மாதத்தில் அறிக்கை

இந்த அறிக்கையின் அடிப்படையில் உம்மன் சாண்டிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பத்துறை மூலம் புதிதான ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த விசாரணை குறித்த அறிக்கை, அடுத்த 6 மாதங்களில் கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.

கிரிமினல் வழக்கு

உம்மன் சாண்டியிடம் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்ட உள்ளது.

முன்னாள் உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி சாட்சியங்களை அழித்ததுடன் உம்மன் சாண்டிக்கு உதவி செய்வதற்காக போலீஸ் அதிகாரிகளையும் கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

இதன் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

சோலார் கம்பெனிக்கு உதவி செய்த மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் அரயாண்டன் மொகமத்துக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

காங்கிரசை சேர்ந்த இரு முன்னாள் எம்.எல்.ஏ.க்களான பென்னி பெஹ்னன், தம்பனூர் ஆகியோரும் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

சரிதா நாயர் பாலியல் புகார் குறித்து விசாரணை

சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் போலீஸ் ஐ.ஜி. கே.பத்மகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கே.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீது சாட்சியங்களை அழித்ததாக புகார் கூறப்பட்டு உள்ளது. அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தவும் அரசு முடிவு செய்து உள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூத்த தலைவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் கடிதம் எழுதி இருந்தார். அது குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

click me!