நானும் காவலாளிதான்... நானும் காவலாளிதான்... பிரதமர் மோடி தொடங்கி வைத்த நூதன பிரசாரம்!

By Asianet TamilFirst Published Mar 17, 2019, 2:56 PM IST
Highlights

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நானும்கூட காவலாளிதான் என்ற வாசகத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அந்தப் பெயருடன் தங்கள் பெயரை சமூக ஊடகங்களில் இணைத்து வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் பாஜகவினர்.
 

ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி ‘சவுகிதார் நரேந்திர மோடி(சவுகிதார்-காவலாளி)’ என்று இன்று மாற்றினார். இதைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ஸவர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார் என்ற பெயரைச் சேர்த்துள்ளனர்.

தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்றுவரும் நரேந்திர மோடி,  “நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன்” பேசிவருகிறார். ஆனால், ரஃபேல் போர் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்த நாட்டின் காவலாளி ஒரு திருடன்’ என்று மோடியை விமர்சித்துவருகிறார். ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது.

 

இந்நிலையில், ராகுல் காந்திக்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, தான் மட்டும் காவலாளி அல்ல, மக்கள் அனைவரும் காவலாளிகள்தான் என்று தெரிவித்து காவலாளி என்ற வார்த்தையைப் பரவலாக்க முயற்சி செய்துவருகிறார். இதையடுத்து சமூக ஊடகங்களில் உள்ள பாஜகவினர் தங்கள் பெயருக்கு முன்பாக காவலாளி என்ற பெயரைச் சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.

click me!