கணக்கில் காட்டாத ‘டெபாசிட் பணத்துக்கு’ 90 சதவீதம் வரி

Asianet News Tamil  
Published : Nov 26, 2016, 09:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
கணக்கில் காட்டாத ‘டெபாசிட் பணத்துக்கு’ 90 சதவீதம் வரி

சுருக்கம்

பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியாமல் செய்த கணக்கில் வராத டெபாசிட் பணத்துக்கு அதிகபட்சமாக 90 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே சமயம், தானாக முன்வந்து வருமான வரித்துறையினரிடம் கணக்கில் காட்டப்படாத பணத்தின் மதிப்பை தெரிவித்து ரூ.500, ரூ1000 நோட்டுகளாக டெபாசிட் செய்தால், அந்த பணத்துக்கு 50 சதவீத வரியும், வங்கியில் இருந்து 4 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாத வகையில் முடக்கி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்கல்
இது தொடர்பாக வருமான வரிச்சட்டத்தில் திருத்தத்தை நடப்புக் கூட்டத் தொடரில் கொண்டுவரவும் அமைச்சரவை நேற்று முன் தினம் கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை இந்த திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.



தடை அறிவிப்பு

நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ.1000, ரூ500 நோட்டுகளை தடைசெய்து பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து வங்கிகள், தபால் நிலையங்களில் மக்கள் பழைய ரூபாய்களை மாற்றலாம், டெபாசிட் செய்யலாம் எனக் கூறியது.

இதில் ரூபாய் மாற்றும் காலக்கெடு நேற்று முன்தினத்தோடு முடிவுக்கு வந்தது. இனி வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும். மேலும், டிசம்பர் 30-ந்தேதி வரை தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 2.50 லட்சம்வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் டெபாசிட் செய்தார் வருமானவரி நோட்டீஸ் பாயும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. 

ரூ.21 ஆயிரம் கோடி

இதற்கிடையே ஜனதன் வங்கிக் கணக்குகளில் திடீரென டெபாசிட் அதிகரித்து, ரூ.64 ஆயிரம் கோடியாக கடந்த சில வாரங்களில் உயர்ந்தது. கருப்பு பணத்தை பதுக்குவோர், கணக்கில் வராத பணம் ஆகியவைஜன்தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. மேலும் டிசம்பர் 30-ந்தேதி வரை, வங்கிக் கணக்குகளில் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் கணக்குகளையும் அரசு கண்காணிக்கத் தொடங்கியது. 

அமைச்சரவை

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன் தினம் கூடி, கணக்கில் வராத, ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக செய்யப்படும் டெபாசிட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

90 சதவீதம்

அந்த கூட்டத்தில், தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளாக ரூ.500, ரூ1000 பயன்படுத்தி வருமான வரித்துறையினருக்கு தெரியாமல் டெபாசிட் செய்து இருந்து அதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தால், அந்த பணத்துக்கு வரி, அபாரம் உள்ளிட்ட 90சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

4 ஆண்டுக்கு தடை

அதேசமயம், வருமானவரித்துறையினருக்கு தெரிவித்து, பழைய ரூபாய் நோட்டுகளாக ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால், அந்த பணத்துக்கு 50 சதவீதம் அபராதமும், அடுத்த 4 ஆண்டுகளுக்கு வங்கியில் இருந்து எடுப்பதற்கும் தடைவிதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜன தன் கணக்கு

 இது தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தில் விதிக்கப்பட்ட 45 சதவீத வரியைக்காட்டிலும் அதிகமாகும். கணக்கில் வராத டெபாசிட்களுக்கு 200 சதவீதம் வரி விதிப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு விதித்தால், அதற்கு சட்ட ஆதரவு இருக்காது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன் தன் கணக்கில் செய்யப்படும் பினாமி டெபாசிட்களை முற்றிலும் அழிக்கும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

 

PREV
click me!

Recommended Stories

150+ சீட்.? மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை.. மம்தாவுக்கு குட்பை.. எக்சிட் போல் முடிவுகள் சொல்வது என்ன?
Assam Election: அசாமில் அடிச்சு தூக்கும் பாஜக.. 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும்.. பரபர கருத்து கணிப்பு