
கர்நாடகாவில், தமிழ் பேனர்கள் கிழித்தெறிந்தவர்கள் மீது, ஆளும் காங்கிரஸ் கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேற்றுமைகள் மக்கள் மனதில் பதியவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த தமிழ் பேனர்களை, கன்னட அமைப்பினர் கிழிந்தெறியப்பட்டதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த தமிழ் பேனர்களை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கிழித்தெறிந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்துள்ளனர்.
நேற்று சுதந்திர தினம் என்பதாலும், ஆடிக்கிருத்திகை கொண்டாட்டம் காரணமாக பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகரில் தமிழ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த பேனர்களை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர், கிழித்தெறிந்துள்ளனர். பேனர்களில் இருந்த தமிழ் வாசகங்களை, மட்டும் அவர்கள் தனியாக கிழித்தெறிந்துள்ளனர். தமிழ் பேனர்கள் கிழித்தெறியப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வைக்கப்பட்டிருந்த தமிழ் பேனர்கள் கிழித்தெறியப்பட்டதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடகத்தில் தமிழர்களும், கன்னடர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.
பெங்களூருவில் தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்றால் எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது. ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் அரசியலுக்காகவும், சுயநலத்துக்காகவும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பேனர்கள் கிழித்தெறியப்பட்டது தொடர்பாக, கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இத்தகைய வேற்றுமைகள் மக்கள் மனதில் பதியவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.