சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியல் ! ஷாக் கொடுத்த சுவிஸ் அரசு !

By Selvanayagam PFirst Published Oct 7, 2019, 7:12 PM IST
Highlights

சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.
 

இந்தியா – சுவிஸ்சர்லாந்து   இடையேயான ஒப்பந்தத்தின் படி சுவிட்சர்லாந்து வரி நிர்வாக அமைப்பான எப்.டி.ஏ.  அந்நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறித்த  தகவல்களை இந்தியாவுக்கு அளித்துள்ளது. 

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து, யாரேனும் தங்கள் வருவாயை மறைத்திருந்தால் இந்த பட்டியல் மூலம் அதனை கண்டறிய முடியும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்த பட்டியலில், தற்போது நடைமுறையில் செயல்பட்டு வரும் கணக்குகள் மற்றும் 2018 க்கு முன்பாக மூடப்பட்ட கணக்குகள் ஆகியவை குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அடுத்த பட்டியல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது பட்டியல் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் வரி நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சுவிட்சர்லாந்தின் நிர்வாக அமைப்பான எப்.டி.ஏ  75 நாடுகளுக்கு வங்கி கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளது. 

இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இவை அனைத்தும் சுவிட்சர்லாந்து நாடு போட்டுள்ள கணக்கு விவரங்களை பரிமாறிக்கொள்ளும்  ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே சாமானிய மக்களால் தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  அதே நேரத்தில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் வயிற்றில் இது புளியைக் கரைத்துள்ளது.

click me!