தங்கக் கடத்தல் வழக்கு... பினராயி விஜயனுக்கு தொடர்பா? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!!

By Narendran SFirst Published Jun 9, 2022, 11:39 PM IST
Highlights

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் கேரளா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் கேரளா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு பெட்டிகளில் சுமார் 30 கிலோ கடத்தல் தங்கம் இருந்துள்ளது. இந்தக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உட்பட 12 பேரை கைது செய்தனர்.

இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டார். இதில் ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஜாமீனில் உள்ளனர். இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் அண்மையில் கூறியிருந்தார். அதன்படி, பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில், தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இது கேரள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை அடுத்து பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த நிலையில், தன் மீதான மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் கோரி ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் முதல்வர் பினராயி விஜயனும், அவரது குடும்பத்தினரும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை நீதிமன்றத்தில் தெரிவிக்கக் கூடாது என முதல்வரால் அனுப்பப்பட்ட ஒருவர் என்னை மிரட்டினார். மேலும், போலீஸாராலும் நான் மிரட்டப்பட்டேன் என்று தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!