
லுக் அவுட் நோட்டிஸை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தமைக்காக கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு பதிலளிக்க கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது.
இதற்கான விசாரணைக்கு அழைத்தும் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. இதனால் தேடப்படும் நபர் என்ற லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது சிபிஐ.
இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை பெற்றார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது சரிதான் என்றும் லுக்அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லுக் அவுட் நோட்டிஸுக்கு எதிராக வழக்கு தொடர கார்த்திக்கு அதிகாரம் இல்லை என வாதிடப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து பதிலளிக்க கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.