
பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க பல சட்டங்கள், திட்டங்கள் கொண்டு வரும்போது, அங்குள்ள விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்று சிவ சேனா கட்சித் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், முதல்வர் ஆதித்யநாத் பசுக்கொலை, பசுக்கடத்தலுக்கு தடை விதித்தார். சட்டவிரோத இறைச்சிக்கடைகளையும் மூட உத்தரவிட்டார். இதைப் பார்த்த மற்ற பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநில அரசுகளும் பசுவைக் காக்க பல சட்டங்களை இயற்றின. குஜராத்தில் பசுக்கொலைக்கு ஆயுள் தண்டனையும், சட்டீஸ்கரில் தூக்கு தண்டனையும் விதிக்க வழி செய்யப்பட உள்ளது.
அதேசமயம், இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் விவசாயிகள் கடன் தொல்லை, விவசாய நஷ்டம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்யும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
இது குறித்து சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
பசுக்களை கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கவும் ஒரு சில மாநில அரசுகள் சட்டம் கொண்டு வர இருக்கின்றன. அப்படியால் அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி, விவசாய நஷ்டத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால், மாநில அரசுக்கு எதிராகவும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.
பசுக்களும், விவசாயிகளும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை பெற்றவர்கள். பசுக்களை பாதுகாப்பதுபோல், விவசாயிகளையும் பாதுகாப்பது அவசியம். பசுக்கொலையைத் தடுக்க ஒரே மாதிரியான சட்டம் நாடுமுழுவதும் கொண்டு வருவது அவசியம். அதேசமயம், பசுக்கள் வயதாகிவிட்டால், அதை என்ன செய்வது என்பதற்கான பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து உள்ளதை கவனிக்க வேண்டும்.
விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், மாநில அரசு சட்டத்துக்கு புறம்பாக செல்கிறது என அர்த்தம். எதிர்க்கட்சிகளின் சங்கார்ஷ் யாத்திரை வேலை செய்யாது. விவசாயிகளின் குறைகளைக் களைய அரசு ஸ்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகளின் அவலநிலைக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.