
மும்பை, நவ. 22-
திருமணத்துக்கு மணமகள், மணமகன் வீட்டார் ரூ.2.5 லட்சம் பணத்தை வங்கிக்கணக்கில் இருந்து எடுக்க கடும் கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை ரிசர்வ் வங்கி நேற்று வௌியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 8-ந் தேதிக்கு முன்பாக, மணமகள், மணமகன் பெற்றோர் வங்கிக் கணக்கில் இருந்த இருப்பில் எந்த அளவு இருந்ததோ அதில் இருந்துதான் ரூ.2.5 லட்சம் பணத்தை எடுக்க முடியும். ஒருவேளை 8-ந் தேதி அன்றோ அல்லது அதற்கு பின் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால், அந்த பணத்தை எடுக்க முடியாது என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
மோடி அறிவிப்பு
நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து வங்கியில் பணம் எடுக்க பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி நாள்தோறும் வௌியிட்டு வருகிறது.
விதிமுறைகள் வெளியீடு
இந்நிலையில், மகன், மகள் ஆகியோருக்கு திருமணம் வைத்திருப்போர் தங்கள் கணக்கில் இருந்து செலவுக்காக ரூ.2.50 லட்சம் எடுத்துக்கொள்ளலாம் என கடந்த சில நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டபின், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அன்று தெரிவித்தது. அதன்படி திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.
1. மணமகன், மணமகள் கணக்கு அல்லது பெற்றோர் வங்கிக்கணக்கில், கடந்த 8-ந்தேதிக்கு முன்பாக என்ன இருப்பு இருந்ததோ அந்த பணத்தில் இருந்துதான் ரூ.2.5 லட்சத்தை எடுக்க முடியும். ஒருவேளை 8-ந்தேதி அதற்குக்கு பின் பணம் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க முடியாது.
2. வங்கியில் பணம் எடுக்கும் போது சமர்பிக்கப்படும் விண்ணப்பத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் பெயர், அவர்களின் அடையாள அட்டைகள், முகவரி, திருமணத் தேதி, திருமணப் பத்திரிகை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
3. திருமணத்துக்காக ஏற்கனவே முன்பணமாக திருமண மண்டபம், சமையல்காரர் உள்ளிட்டோருக்கு கொடுத்திருந்தால் அதற்கான ‘பில்’ நகலையும் இணைக்க வேண்டும்.
4. டிசம்பர் 30-ந் தேதிக்கு முன்பாக நடக்கும் திருமணத்துக்கு மட்டும்தான் வங்கியில் இருந்து ரூ.2.5 லட்சம் பணம் எடுக்க முடியும்.
5. பணம் எடுக்கும் போது, யாருக்கெல்லாம் இந்த பணத்தை கொடுக்கப்போகிறோம் என்ற பட்டியலை தெரிவிக்க வேண்டும். அதாவது, பூக்காரர், சமையல்காரர், மைக்செட், மண்டபம், உள்ளிட்டவர்கள் பட்டியலையும் , எவ்வளவு பணம் கொடுக்கப் போகிறோம் என்ற விவரத்தை திருமண வீட்டார் அளிக்க வேண்டும்.
6. அவ்வாறு கொடுக்கும் பணத்தை பெறும் அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு வங்கிக்கணக்கு இருக்கக் கூடாது. தான் கொடுக்கும் பணம் இந்த காரணத்துக்காகத்தான் கொடுக்கிறோம் என்ற விவரத்தையும் திருமணவீட்டார் குறிப்பிடப்பட வேண்டும்.
7. வங்கிக் கணக்கில் இருந்து பணத்ைத மணமகள், அல்லது அவரின் பெற்றோர்கள், மணமகள் அல்லது அவரின் பெற்றோர்கள் இவர்களில் யாராவது ஒருவர் மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
8. மேலும், திருமண வீட்டார்கள் செலவுக்காக ரொக்கப்பணமாக எடுப்பதைத் தவிர்த்து, காசோலை, வரைவோலை, ‘டெபிட் கார்டு’, ‘கிரெடிட் கார்டு’, ‘ஆன்-லைன்’ பரிமாற்றம், ‘மொபைல் பேமென்ட்’, ஆகியவை மூலம் பரிமாற்றம் செய்வதை வங்கிகள் ஊக்கப்படுத்த வேண்டும்.
9. திருமணத்துக்காக பணம் பெறும் குடும்பத்தினர் அளிக்கும் ஆதாரங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும். இது தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தக்கூடும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.