
சட்ட விரோத பணப் பரிமாற்றம் வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்,தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும், மத்திய மற்றும் தமிழக உள்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்த்தார் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் 120 கோடி ருபாய் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது, மேலும் இதில் 33 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது.
அடுத்தடுத்து நடந்த சோதனையில், தங்கம், பணம் புதிய நோட்டுக்கள் அறிமுகமான சில நாட்களிலேயே, சேகர் ரெட்டியிடம் இவ்வளவு தொகை வந்தது அதிர்ச்சியை எற்படுத்தியது.
இதனை அடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறையினரும், சிபிஐயும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுவரை அவர் மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யாததால் இரண்டு வழக்குகளிலும் சேகர் ரெட்டிக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சேகர் ரெட்டியை கொலை செய்ய புழல் சிறையில் சில குற்றவாளிகள் வெளியில் உள்ள தன் நண்பர்களுடன் சேர்ந்து சதி திட்டம் திட்டமிட்டுள்ளதாக, அவருக்கு தமிழக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை மீண்டும் சேகர் ரெட்டிக்கு மிரட்டல் வந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே தற்போது மீண்டும் இதுதொடர்பாக மத்திய, மற்றும் தமிழக உள்துறை செயலாளர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில்,'எனக்கு மீண்டும், மீண்டும் கொலை மிரட்டல்கள் வருகிறது. எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. எனவே எனக்கும், என் குடும்பத்துக்கும் உடனே உரிய பாதுகாப்பு தர வேண்டும்' மேலும் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் தாமே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.