ராமர் கோயில் போல் அயோத்தியில் மசூதி கட்டவும் அறக்கட்டளை :சரத் பவார்

By Asianet TamilFirst Published Feb 21, 2020, 6:45 PM IST
Highlights

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைத்ததுபோல் மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைத்ததுபோல் மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல பத்தாண்டுகளாக முடியாமல் இழுத்து கொண்டியிருந்த பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டி கொள்ளலாம். முஸ்லிம்கள் மசூதி கட்டி கொள்ள 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராமர் கோயில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறக்கட்டளையை மத்திய அரசு அண்மையில் அமைத்தது.

இந்நிலையில், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்  பேசுகையில் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைத்தது போல், அங்கு மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும். கோயிலுக்காக உங்களால் (மத்திய அரசு) அறக்கட்டளை அமைக்க முடிகிறது என்றால் அப்புறம் ஏன் மசூதி கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கவில்லை. இந்த நாடு ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால்தான் மத்திய அரசு அறக்கட்டளையை அமைத்தது. மத்திய அரசு தானாக அறக்கட்டளை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், சரத் பவார் அயோத்தியில் மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!