சந்தேஷ்காலி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திருப்பமாக புகார் கொடுத்த பெண் ஒருவர் அதனை திரும்பப் பெற்றுள்ளார்
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரும், அவரது கூட்டாளிகளும் அப்பகுதியில் விளைநிலங்களை அபகரித்ததாகவும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பெருமளவிலான போராட்டத்தை முன்னெடுத்தது. பெண்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, ஷாஜகான் ஷேக்கை கட்சியில் இருந்து நீக்கி திரிணாமூல் காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
undefined
இந்த நிலையில், சந்தேஷ்காலி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார்களை கொடுத்த 3 பெண்களில் ஒருவர் புகாரை திரும்பப் பெற்றுள்ளார். எந்த துன்புறுத்தலுக்கும் தான் ஆளாகவில்லை என்றும், பாஜக தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் வெற்றுக் காகிதத்தில் தான் கையெழுத்திட்டதாவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரை திரும்பப்பெற்ற அந்த பெண்ணும், அவரது மாமியாரும் மாஜிஸ்திரேட் முன்பு தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். “நாங்கள் எந்த தவறான புகாரிலும் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் யாரும் எங்களுடன் எங்களிடம் பேசுவதில்லை. பொய் புகாரை ரத்து செய்யுமாறு கேட்டபோது, நாங்கள் விரட்டியடிக்கப்பட்டோம்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அப்பெண், “ஒரு நாள் பியாலி தாஸ், மம்பி தாஸ் ஆகிய இரண்டு பெண்கள் எங்களது வீட்டிற்கு வந்து எனது மாமியாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் காவல் நிலையம் சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. என் மாமியார் 100 நாள் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சமைத்ததற்கான பாக்கி இன்னும் கிடைக்கவில்லை என்று மட்டுமே கூறினார். பின்னர் அவர் வெற்று காகிதத்தில் கையெழுத்திட்டார். அந்த காகிதத்தில் என்ன இருக்கிறது என்றுகூட எங்களுக்கு தெரியாது. என்ன வழக்கு என்றும் எங்களுக்கு தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் திரிணாமுல் தலைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்களின் பட்டியலில் தானும் தனது மாமியாரும் இருப்பதாக பின்னரே தெரிந்து கொண்டதாகவும் அந்தப் பெண் கூறினார்.
அம்பானி, அதானி பற்றி ராகுல் பேசாதது ஏன்? பிரதமர் கேள்விக்கு பிரியங்கா காந்தி பதில்!
முன்னதாக, சந்தேஷ்காலி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரியால் புனையப்பட்ட ஒன்று என பேசும் பாஜக நிர்வாகிகளின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க மாநிலத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பாஜக சதித்திட்டத்தை தீட்டியுள்ளது. இந்தியாவை ஆண்ட எந்த கட்சியும் ஒரு மாநிலத்தையும், மக்களையும் இழிவுபடுத்த இந்த அளவுக்கு முயற்சி செய்யவில்லை.” என்று பதிவிட்டிருந்தார்.
அதேசமயம், சந்தேஷ்காலி விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டியதாக சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜகவினர் மீது தேர்தல் ஆணையத்திடம் திரிணாமூல் காங்கிரஸ் இன்று புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.