
வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியுடன் தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அரசியல் அமைப்பு சட்ட நாள்
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பானது. இந்த உரையில் மோடி கூறியதாவது-
இன்று 26/11. நவம்பர் மாதம் 26ஆம் தேதிதான் நமது அரசியலமைப்புச் சட்ட நாள். 1949ஆம் ஆண்டில், இன்றைய நாளன்று தான், அரசியலமைப்பு சட்ட சபையில் பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அம்பேத்கர்
இதை அமைப்பதில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் செயல்திறன்மிக்க தலைமையின் அழியாத முத்திரை பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியலமைப்புச்சட்டம் காட்டும் ஒளியின் துணைகொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தவர்களின் தெளிவான சிந்தனைகளை மனதில் தாங்கிப் புதிய பாரதம் அமைப்பது நம் அனைவரின் கடமையாகும்.
நமது அரசியலமைப்புச் சட்டம் மிகவும் விசாலமானது. அதில் காணப்படாத வாழ்க்கையின் அம்சம் இல்லை, இயற்கை பற்றிய விஷயம் இல்லை எனும் அளவுக்கு இருக்கிறது. அனைவருக்கும் சமத்துவம், அனைவரிடத்திலும் புரிந்துணர்வு என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாளம்.
இன்று நாம் பாரதத்தின் அரசியலமைப்புச்சட்டம் அளிக்கும் பெருமிதத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். அரசியலமைப்புச் சட்ட நாளான இன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை நினைவுகூர்வது என்பது இயல்பான விஷயம்.
மும்பை தாக்குதல்
26/11 நமது அரசியலமைப்புச்சட்ட தினம் என்றாலும், 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த 26/11ஐ இந்த தேசத்தால் எப்படி மறக்க முடியும்? அன்று தான் தீவிரவாதிகள் மும்பை மீது கொடும்தாக்குதல் நடத்தினார்கள்.
வீரம் நிறைந்த குடிமக்கள், காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் என, உயிர்துறந்த அனைவரையும் தேசம் நினைவுகூர்கிறது, அஞ்சலி செலுத்துகிறது. இந்த தேசம் அவர்களின் தியாகத்தை என்றென்றும் மறக்காது.
வெற்றிபெற விடமாட்டோம்
தீவிரவாதம் என்பது இன்று உலகம் முழுக்கப் பரவியிருக்கும் ஒன்று, தினந்தினம் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது, ஒரு அதிபயங்கரமான வடிவத்தில் அது நடைபெறுகிறது. நாம் கடந்த 40 ஆண்டுகளாகவே தீவிரவாதத்தால் பீடிக்கப்பட்டு வந்திருக்கிறோம்.
மனித நேயத்திற்கு பயங்கரவாதம் சவாலாக அச்சுறுத்தலாகவும் உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். நாம் பயங்கரவாதத்தை வெற்றி பெற விட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.