சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம்... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

By vinoth kumarFirst Published Sep 28, 2018, 11:17 AM IST
Highlights

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயது வரை பெண்கள் வழிபட தடை நீக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயது வரை பெண்கள் வழிபட தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகளில் 4 பேர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கி உள்ளார். 

முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இந்திய இளம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் நாரிமன், சந்திராசூட், கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடந்து வந்தது. மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சார்பில் ரஜு ராமசந்திரன், ராமமூர்த்தி ஆகிய இருவர் சிறப்பு வழக்கறிஞர்களாக (அமிக்கஸ் கியூரி) நியமிக்கப்பட்டுள்ளனர். 

கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பதில் தவறில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரள அரசின் கருத்திற்கு நேர்மாறாக திருவிதாங்கூர் தேசவம்போர்டு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறியிருந்தனர். 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நடந்த விசாரணை நடந்தபோது சிறப்பு வழக்கறிஞர் ராமமூர்த்தி கூறுகையில் சபரிமலையில் தற்போது உள்ள எல்லா கட்டுப்பாடுகளும் அதேபோல் தொடரவேண்டும். சபரிமலையில் கடைபிடிக்கப்படும் ஆகம விதிகள் அரசியல் அமைப்பு வழங்கும் சம உரிமையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஒரு மத நம்பிக்கை அடிப்படையில்தான் சபரிமலையில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 

மேலும் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் அரசியல் நிர்பந்தங்களால் தான் கேரள அரசு நிலைப்பாட்டை மாற்றியது என்று தெரிவித்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மத நம்பிக்கையை கேள்வி கேட்க முடியாது. ஆனால் அந்த நம்பிக்கையில் உள்ள நம்பக தன்மையையும், வாதங்களில் உள்ள உண்மை நிலையையும் கேள்வி கேட்கலாம். 

இந்த விஷயங்களை முன்னிறுத்தி பெண்களை அனுமதிப்பதை எதிர்ப்பவர்களுக்கு மனுதாரர்கள் பதில் அளிக்கலாம் என்று கூறினார். நீதிபதி நாரிமன் கூறுகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆணுக்கும் பெண்ணும் சம உரிமை வழங்குவது அவசியமா என்பதை மனுதாரர்கள் நிரூபணம் செய்யவேண்டும் என்று கூறினார். இதனையடுத்து வழக்கின் விசாரணை முடிவிற்கு வந்துள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வமான வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று கூறியுள்ளது. சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயது வரை பெண்கள் வழிபட தடை நீக்கப்பட்டுள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

தலைமை நீதிபதி கருத்து

ஆண்களுக்கு பெண்கள் தாழ்வானவார்கள் அல்ல என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். பெண்களை கடவுளாக வழிபடும் நாட்டில் சில கோயில்களில் தடை விதிப்பது சரியல்ல. மேலும் கடவுளை வணங்குவதில் ஆண்-பெண் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என தலைமை நீதிபதி கூறியுள்ளார். 

click me!