
ரெயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி.யின் “ேகட்டரிங்” பிரிவில் நடக்கும் கட்டணக் கொள்ளையை பயணி ஒருவர் பேஸ்புக் மூலம் அம்பலப்படுத்தி உள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது
உத்தரப்பிரதேசம் பரேலி நகரைச் சேர்ந்தவர் நீலப் கனிக்கர். இவர் தனது குடும்பத்தாருடன் துலியாஜியான் நகரில் இருந்து அசாம் மாநிலம் திமாப்பூருக்கு “நியூ தின்சுக்கியா ராஜேந்திரநகர் பாட்னா எக்ஸ்பிரஸ்” ரெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் செய்தார்.
அப்போது, ரெயிலில் கேட்டரிங் பிரிவில் உணவு அளிக்கும் சர்வரிடம் தனது குடும்பத்தாருக்காக 2 பிளேட் முட்டை பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அவர்களும் முட்டை பிரியாணி கொடுத்துவிட்டு, ஒரு பிளேட் ரூ.80 வீதம் 2 பிளேட்களுக்கு ரூ.160 கட்டணமாக வசூலித்துச் சென்றனர். இந்நிலையில் முட்டை பிரியாணியின் விலை குறித்து நீலப் கனிக்கருக்கு சந்தேகம் ஏற்படவே, அவர், ரெயிலில் சமையல் செய்யும் பெட்டிக்கு சென்று, உணவு விலைப் பட்டியலைக் கேட்டுள்ளார்.
அப்போது, அந்த விைலப்பட்டியலில் முட்டை பிரியாணியின் விலை ரூ.63 என குறிப்பிடப்பட்டு இருந்தது. விலைப்பட்டியலில் ஒரு முட்டை பிரியாணியின் விலை ரூ.63 என குறிப்பிட்டுள்ள போது என்னிடம் ஏன் ரூ.80 கட்டணம் வசூலித்தீர்கள் என சமையல் அறையில் பணியாற்றிய ஊழியர்களிடம் நீலப் கனிக்கர் கேட்டுள்ளார்.
ஆனால், இதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காததையடுத்து, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், தன்னிடம் இருந்த செல்போனில் அங்குநடந்த காட்சிகளையும், தனக்கு உணவு பரிமாறிய ஊழியரைக் கண்டுபிடித்து அவரிடம் வீடியோ பதிவில் ஏன் அதிகமாக கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்று கேட்டு பதிவுசெய்து கொண்டார். இவை அனைத்தும் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என சமையல் அறை ஊழியர்கள், கண்காணிப்பாளர்களிடம் நீலப் கூறினார். இதையடுத்து, அவர்கள் தவறை உணர்ந்து பணத்தை திருப்பித் தருவதாக தெரிவித்தனர்.
யாரும் இதுபோல் அமைதியாக இருந்து விட வேண்டாம், கண் முன் நடக்கும் ஊழலை தட்டிக்கேளுங்கள், என் கண்முன் நடந்ததற்கு நான் நியாயம் கேட்டுவிட்டேன். நீங்களும் அதுபோல் நடந்துகொள்ளுங்கள் என்று நீலப் தனது பேஸ்புக் பதிவில் முடித்துள்ளார்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தையும், ரெயிலில் பயணிப்பவர்களிடம் சாப்பாடு என்ற பெயரில் அடிக்கும் கட்டணக் கொள்ளை, ரெயிலில் பதிவு செய்த வீடியோ என அனைத்தையும் நீலப் தனது பேஸ்புக்கில் பதிவு செய்தார். இதைப் பார்த்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரெயில்வேயின் மோசமான நிர்வாகத்தையும், ஊழலையும் கடுமையாகச்சாடி உள்ளனர். இந்த பதிவு வைரலாகப் பரவி வருகிறது.
இதற்கு முன், இதேபோல ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவேந்திர கே சின்ஹா, ஐ.ஆர்.சி.டி.சி.யில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என குற்றம்சாட்டி பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்தார். இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் குப்தா விளக்கம் அளித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.