விஸ்வரூபம் எடுத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி! நாயுடு காங்கிரசிடம் சரண் அடைந்ததன் பின்னணி!

By vinoth kumarFirst Published Nov 2, 2018, 10:42 AM IST
Highlights

ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது பரம எதிரியான காங்கிரசுடன் கை கோர்த்ததன் பின்னணியில் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளதே காரணமாக சொல்லப்படுகிறது. 

ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது பரம எதிரியான காங்கிரசுடன் கை கோர்த்ததன் பின்னணியில் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளதே காரணமாக சொல்லப்படுகிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 103 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 66 இடங்களில் வென்று எதிர்கட்சியானது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையும் சந்திரபாபு நாயுடுவால் நிறைவேற்ற முடியவில்லை. மேலும் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேசை சுற்றி ஏரளாமான ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன.

 

இந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஆந்திராவின் அடுத்த முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தான் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் சந்திரபாபு நாயுடுவை விட ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில் நடிகர் பவன் கல்யானின் ஜன சேனா கட்சியும் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகிறது.

 

தெலுங்கு தேசம் – ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் – பவன் கல்யானின் ஜன சேனா என ஆந்திரா மும்முனை போட்டியை சந்திக்க உள்ளது. இதில் பவன் கல்யான் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குகளை கணிசமான அளவில் பிரித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் விசாகப்பட்டினத்தில் வைத்து ஜெகன் மோகன் ரெட்டி கத்தியால் தாக்கப்பட்டார். இந்த விவகாரத்திற்கு பிறகு ஜெகன் மோகன் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் குவிகிறார்கள். 

ஜெகன் மோகன் மீது பெரிய அளவில் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெகன் மோகனை கொலை செய்ய தெலுங்கு தேசம் கட்சி முயற்சித்தது என்கிற ஒய்.எஸ்.ஆர் காங்கிரசாரின் பிரச்சாரமும் மக்கள் மத்தியில் எடுபட்டுள்ளது. இந்த நிலையில் தான் தேர்தலில் போட்டியிலேயே இல்லாத காங்கிரஸ் கட்சியின் உதவியை சந்திரபாபு நாயுடு நாடியுள்ளார். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலிலும் ஆந்திராவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி மீது பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் அந்த கட்சிக்கு என்று குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ளது. அதனை கைப்பற்றினால் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது சந்திரபாபு நாயுடுவின் கணிப்பு. மேலும் மத்தியிலும் மோடி அரசு தொடர்ந்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியை இழந்தால் மகன் மீதான ஊழல் புகார் விசாரணையில் தர்மசங்கடத்தை சந்திக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அஞ்சுகிறார். 

இதனால் தான் வேறு வழியே இல்லாமல் அவர் டெல்லி சென்று ராகுலை சந்தித்து காங்கிரசிடம் சரண் அடைந்துள்ளார். ஆனால் இதனையே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்த காங்கிரசுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி சேர்ந்துள்ளதாக முன்வைக்கப்படும் பிரச்சாரம் தெலுங்கு தேசத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆந்திராவை இரண்டாக பிரிக்க காங்கிரஸ் தான் காரணம் என்று கருதியே கடந்த தேர்தலில் அந்த கட்சிக்கு ஒரு இடத்தில் கூட அம்மாநில மக்கள் வெற்றியை கொடுக்கவில்லை.

click me!