பெட்ரோல் - டீசலில் ஓடுற பைக் - கார் வைத்திருக்கிறீர்களா? வேற வழியே இல்ல... காயலான் கடையிலதான் போட்டாகணும்..!

By Thiraviaraj RMFirst Published Jun 27, 2019, 12:25 PM IST
Highlights

2023ம் ஆண்டு முதல் மின்சார ஆற்றலில் இயங்கும் ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே வாங்கவும், உற்பத்தி செய்யவும் அனுமதிக்க வேண்டும். 

வாகனங்களின் பதிவு மற்றும் மறு பதிவிற்கான கட்டணத் தொகையை தற்போதைய நிலையில் இருந்து 400 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

16வது மக்களவையின் ஆட்சிக் காலம் நிறைவுபெற்றதை அடுத்து, மோட்டார் வாகன திருத்த சட்டமசோதா காலாவதியாகிவிட்டது. எனினும், சாலை பாதுகாப்பு ஆர்வலர்களின் ஆலோசனையோடு அதே மசோதா, சில மாற்றங்களுடன் மீண்டும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை அதிகரித்து வசூலிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. மேலும், வாகனப் பதிவு மற்றும் மறுப்பதிவுக்கு தற்போது பெறப்படும் கட்டணத்தில் இருந்து 400 மடங்கு உயர்த்தி வசூலிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

எனினும், மின்வாகன பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு விடாப்பிடி காட்டி வருகிறது. அதன்படி, நாட்டில் இயங்கும் அனைத்து இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இன்னும் இரண்டு வாரங்களில், தங்களுடைய மின் வாகன உற்பத்திக்கான திட்டத்தை வரைவாக சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

நிதி அயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் மத்திய அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அறிக்கையில், 2025ம் ஆண்டு முதல் 150 சிசி இழுவைத் திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் மின்சார ஆற்றல் பெற்ற மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யவும், உற்பத்தி செய்யவும் அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். 2023ம் ஆண்டு முதல் மின்சார ஆற்றலில் இயங்கும் ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே வாங்கவும், உற்பத்தி செய்யவும் அனுமதிக்க வேண்டும். இதே உத்தரவு 2025ம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

 

இதுகுறித்து பரிசீலித்து வந்த மத்திய அரசு, தற்போது எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பதிவுசெய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களின் மறுப்பதிவுக்கான கட்டணம் அதிகரிக்க வேண்டும் என பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில், பயணிகள் ரக கார்களுக்கான கட்டணம் தற்போது வசூலிக்கப்படும் ரூ. 1000-ல் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என தெரிகிறது. அதேபோல, வாடகை கார்களுக்கு ரூ. 1000 -ல் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கனரக வாகனங்களை புதுப்பிக்கும் பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தெரிகிறது. தற்போது நடைமுறையில் உள்ள மோட்டார் வாகனச் சட்டப்படி, பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு மறுபதிவு செய்யப்பட வேண்டும். இந்த புதிய வாகன விதிகள் நடைமுறைக்கு வந்தால், பெட்ரோல் டீசல் வாகனப் பயன்பாடு மக்களிடையே குறைந்து, மின்வாகன பயன்பாடு அதிகரிக்கும் என என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. 

பழைய வாகனங்கள் மட்டுமில்லாமல், புதிய வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, பயணிகள் ரக காரை பதிவு செய்வதற்கு ரூ.1000 கட்டணம் பெறப்படுகிறது. இதை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, கனரக வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை 1,200 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, கனரக வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை உயரும் என தெரிகிறது. 

ஒருவேளை மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசின் இந்த முயற்சிகள் தோல்வி அடையுமானால், பழைய வாகனங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதிக்கப்படும் நடைமுறை மாறி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்கள் சோதனை செய்யப்படும் உத்தரவு அமலுக்கு வரும். தவிர, குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு சாலை வரியை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 

click me!