நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..! முக்கியத்துவம் வாய்ந்த உரை

By karthikeyan VFirst Published Jun 29, 2020, 11:14 PM IST
Highlights

பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 
 

பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தாறுமாறாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. 

கொரோனாவை தடுக்க மார்ச் 25லிருந்து ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், ஜூன் மாதம் தளர்வுகள் விதிக்கப்பட்டது. அந்த கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட அன்லாக் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கியதிலிருந்து பலமுறை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கிறார். இந்நிலையில், நாளை பிரதமர் மோடி மாலை 4 மணிக்கு உரையாற்றவுள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் டுவீட் செய்துள்ளது. 

இதற்கு முந்தைய உரைகளை விட இது  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், சீனா ராணுவம் இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் சீன ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கல்வான் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சீனாவுக்கு வர்த்தக ரீதியான உறவில் கடிவாளம் போடுகிறது இந்திய அரசு. சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதற்கு அதிகமான அளவில் சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யுமளவிற்கு, ஏற்றுமதி செய்யாததே காரணம். கல்வான் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைப்பதற்கான முன்னெடுப்புகளை மோடி அரசு எடுக்க தொடங்கிவிட்டது. 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, சீன முதலீடுகளை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் என சீனாவிற்கு வர்த்தக ரீதியில் நேரடியாக சவாலளிக்க தொடங்கியுள்ளது இந்தியா.

சீன மொபைல் ஆப்களான டிக் டாக், ஹெலோ, ஷேர் இட், யுசி பிரவுசர், யுசி நியூஸ், வீ சாட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன அப்ளிகேஷன்களை இந்தியாவில் பயன்படுத்த இந்திய அரசு இன்று தான் தடை விதித்தது.

இப்படியான சூழலில் பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. ஏனெனில் சீன விவகாரம் குறித்தும், சீனாவுடனான வர்த்தகம் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!