
உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை; ஜனநாயகம் இல்லை என நீதிபதிகள் பரபரப்பு புகார் அளித்ததை அடுத்து சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகிய 4 நீதிபதிகளும் செய்தியாளர்களை சந்தித்து நீதிமன்றத்தின் நிர்வாகத்தின் மீதும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதும் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை. ஜனநாயகம் இல்லை. அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே எடுக்கிறார். சில நடவடிக்கைகள் முறைப்படி இருக்க வேண்டும். ஆனால் அவை முறைப்படி நடப்பதில்லை. கடந்த சில மாதங்களாகவே நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வேறு வழியில்லாமல் மக்கள் மன்றத்தை நாடியுள்ளோம் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
நாட்டுக்கே நீதி சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே நீதி கிடைக்கவில்லை என அவர்கள், மக்கள் மன்றத்தை நாடிய விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் புகாரை அடுத்து, இதுதொடர்பாக சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார். இதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட அமைச்சருடன் பிரதமர் ஆலோசித்து வருகிறார்.