
கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், பா.ஜனதா கட்சி 13 இடங்களையும் கைப்பற்றியது.
ஆட்சி அமைக்க 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், பா.ஜனதா கட்சி சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைக்கிறது.
மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் கோவா கவர்னர் மிருதுளா சின்காவை நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
மேலும் தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தையும் அளித்தனர். இதையடுத்து கோவாவில் ஆட்சி அமைக்க மனோகர் பாரிக்கருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். 15 தினங்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பாதுக்காப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற மனோகர் பாரிக்கர், தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். நாளை கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்கிறார். இதையடுத்து நிதி அமைச்சர் அருன்ஜெட்லிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் பொறுப்பாக அருண்ஜெட்லிக்கு பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.